Published : 03 Apr 2015 08:28 AM
Last Updated : 03 Apr 2015 08:28 AM
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் இன்று காலை தொடங்குகிறது. இக்கூட்டத்தில் தென்னிந்தியாவில் பாஜகவை வலுப்படுத்தவும், தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் பாஜகவை ஆட்சியல் அமர்த்தவும் தேவையான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 5-வது முறையாக பெங்களூருவில் உள்ள லலித் அசோக் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உட்பட தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பாஜக மாநில தலைவர்கள் என 330 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மோடி பிரதமரான பிறகும், அமித் ஷா தலைவரான பிறகும் நடை பெறும் முதல் தேசிய செயற் குழு கூட்டம் இதுவாகும். இந்த செயற்குழு கூட்டத்தில் வகுக்கப் படும் திட்டங்கள், எதிர்கால அரசியல் கணிப்புகள், செயல் படுத்த வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
தென்னிந்தியா மீது கவனம்
தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், அதில் இடம் பெற வேண்டிய கூட்டணி குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கர்நாடகத்தைப் போலவே தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.
தனித்தோ, கூட்டணி அமைத்தோ ஆட்சியை கைப் பற்றும் வகையில் அமித் ஷா தலைமையிலான குழு புதிய செயல் திட்டங்களை வகுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த செயற்குழு கூட்டம் முடிந் ததும் பெங்களூரு நேஷனல் கல்லூரி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் தேசிய செயற்குழுவின் தீர்மானங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கி, முக்கிய தலைவர்கள் உரையாற்றுவார்கள். இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், பாஜகவின் வளர்ச்சி குறித்தும் பேசுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்வானி புறக்கணிப்பு
பாஜக செயற்குழு நிகழ்ச்சி நிரலில் பல்வேறு தலைப்புகளில் பாஜக முக்கிய தலைவர்கள் பேசவுள்ளனர். ஆனால் அதில் பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமித் ஷா தலைமையிலான பாஜக உயர்நிலை குழு திட்டமிட்டே அத்வானிக்கு பேச வாய்ப்பு மறுத் துள்ளது. இதன் காரணமாகவே நேற்று பெங்களூருவில் நடை பெற்ற பாஜக உயர்நிலை தலை வர்கள் கூட்டத்தை அத்வானி புறக்கணித்துள்ளார். செயற்குழு கூட்டத்தையும் அத்வானி புறக்கணிக்கலாம் எனத் தெரிகிறது.
பலத்த பாதுகாப்பு
பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் பெங்களூருவில் கூட்டம் நடைபெறும் இடம், தலைவர்கள் தங்கியுள்ள விடுதிகள், பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெறும் இடம் என முக்கிய பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
பெங்களூரில் பாஜக அலுவலக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT