Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

கேஜ்ரிவாலின் செயல்கள் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பவை- மணீஷ் திவாரி தாக்கு

ஆம் ஆத்மியின் போராட்டத்தை ராஜ்பாத் வரை கொண்டு செல்வோம் என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளது குடியரசு தினக் கொண்டாட்டத்தையே சீர்குலைக்கக்கூடியது என்று கண்டித்துள்ளார் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி.

நிருபர்களிடம் செவ்வாய்க் கிழமை திவாரி கூறியதாவது:

உண்மையில் சொல்லப் போனால் குடியரசு தின விழாவுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக நடத்தவேண்டிய பொறுப்பு டெல்லி அரசுக்கு இருக்கிறது.

இந்த விழாவை வெற்றிகரமாக நடத்திடவேண்டிய கடமை மத்திய அரசுக்கு மட்டும்தானா உள்ளது. டெல்லி முதல்வருக்கும் இதர அமைச்சர்களுக்கும் இந்த பொறுப்பு இல்லையா என்ன?

கேஜ்ரிவாலின் செயல்கள் முற்றிலும் அரசமைப்புச் சட்டத்துக்கு அவமதிப்பு செய்பவையாக இருக்கின்றன.

தெருக்களில் திரண்டு போராட்டம் நடத்தி ஆட்சி நிர்வாகம் என்று ஒன்று இல்லாத நிலைமையை உருவாக்குவதற்காக ஆம் ஆத்மியை மக்கள் தேர்வு செய்யவில்லை.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று வார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் மக்கள் அவர்களை பொறுப்பில் அமர்த்தியுள்ளனர்.

ஆனால் நடப்பவை துரதிருஷ்டவசமாக இருக்கிறது. தமது செயல்கள் மூலமாக டெல்லி மக்களை புறக்கணிக்கிறது மாநில அரசு. அரசமைப்புச் சட்டத்தின் மீது பிரமாணம் செய்து பதவியேற்றவர்களின் செயல்பாடு அதற்கு அவமரியாதை செய்வதுபோல அமைந்துள்ளது என்றார் மணீஷ் திவாரி.

போதை மருந்து மற்றும் விபசார கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பானர்ஜி கடந்த வாரம் உத்தரவிட்டபோதிலும் நடவடிக்கை எடுக்க மறுத்ததாக டில்லி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேஜ்ரிவாலும் அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக ரயில் பவனுக்கு செல்லும் சாலையில் ஆம் ஆத்மி கட்சியினர் தர்ணா நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ராஜ்பாத் சாலைக்கும் விரிவுபடுத்தப் போவதாக கூறியுள்ளனர்.

ராஜ்பாத் சாலைதான் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறக்கூடிய முக்கிய பகுதியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x