Last Updated : 11 Oct, 2014 11:53 AM

 

Published : 11 Oct 2014 11:53 AM
Last Updated : 11 Oct 2014 11:53 AM

தீர்ப்பை மதித்து நடந்தால் ஜெயலலிதாவின் செல்வாக்கு உயரும்: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.கபூர் பேட்டி

ஊழல் தடுப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடந்தால் அவர் மீதான செல்வாக்கு பன்மடங்கு உயரும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.கபூர் கூறியுள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, டான்சி வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக் கினால் அவர் பதவி இழந்தார்.

இந்த வழக்கை அப்போது தொடுத்தது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பி.ஆர்.கபூர் அவரது மகன் ஆர்.கே.கபூர். தற் போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றது குறித்து ‘தி இந்து'வுக்கு ஆர்.கே.கபூர். அளித்த சிறப்பு பேட்டி:

2001-ல் நீங்கள் வழக்கு தொடுக்கக் காரணம் என்ன?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர் கள் எம்எல்ஏ அல்லது எம்பியாக இருக்க முடியாது. டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது இதை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தோம்.

இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, எனது வழக்கு அரசியல் சாசன சட்டம் சம்பந்தப்பட்டது என்பதால் ஐந்து பேர் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியது. அந்த அமர்வின் தீர்ப்பால் ஜெயலலிதா அப்போது முதல்வர் பதவியை இழந்தார்.

பிறகு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 8-ல் உட்பிரிவு 4-ன்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார்.

2001-ல் நீங்கள் மனு தாக்கல் செய்ய காரணமாக இருந்தவர்கள் யார்?

நிச்சயமாக தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத ஒருவர் ஹரியாணா அமைச்சராக பொறுப்பேற்றார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 மாதங்களுக்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. எனினும் அவர் மீண்டும் பதவி யேற்று அமைச்சரானார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்.எல்.ஏ. அல்லது எம்பியாக இல்லாமல் பிரதமர், முதல்வர் உட் பட எந்த பதவியையும் 6 மாதங்கள் வரை வகிக்க ஒருமுறைதான் வாய்ப்பளிக்கப்படும்.

இதை மீறிய ஹரியாணா அமைச்சர் மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்து பதவி இழக்கச் செய்தோம். அப்போது ஜெயலலிதாவும் டான்சி வழக்கில் தண்டனை பெற்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியதால் அவருக்கு எதிராக மனு அளிக்கும் யோசனை வந்தது.

தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஜெயலலிதாவுக்கு விதிக்கப் பட்ட தண்டனைக்கு தடை விதிக் கப்பட்டு ஜாமீன் கிடைத்தாலும்கூட நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு தடை கிடைக்கும் வரை மீண்டும் அவர் பதவியில் அமர முடியாது. எனவே ஜெயலலிதா சட்டத்தை மதித்து சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்வதுதான் நல்லது. இதில் வழக்கமாக அளிக்கப்பட்ட தண்டனைகளுக்கு தடை கிடைக் குமே தவிர நிரூபிக்கப்பட்ட குற்றங் களுக்குத் தடை கிடைக்காது.

நவ்ஜோத்சிங் சித்து வழக்கில் நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டது உதாரணமாகக் கூறப்படுகிறதே?

சித்து மற்றும் ஜெயலலிதாவின் வழக்குகளுக்கு இடையிலான வித்தியாசம் அதிகம். சித்துவின் வழக்கில் அவர் விடுதலையாகும் வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால் அவர் மீது நிரூபணமான குற்றங்களுக்கு தடை கிடைத்தது. ஆனால், ஜெயலலிதா வழக்கில் அப்படி அல்ல. அவர் மீது பதிவான வழக்குகளின் பிரிவுகளும் வேறு. இதில் குற்றங்களின் மீதான நிரூபணத்துக்கு தடை கிடைப்பது அரிதாகும்.

இந்த சூழலில் நீங்கள் ஜெயலலி தாவுக்கு கூறும் ஆலோசனை என்ன?

அவர் இந்தக் குற்றத்தை செய்தாரா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. அவரது சிறந்த நிர்வாகத் திறனைக் கண்டு வியந்தது உண்டு. ஜெயலலிதாவை பொறுத்த வரை அவருக்கு பொதுமக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடப்பதாக அவர் அறிவித்துவிட்டால் இந்த செல்வாக்கு மேலும் பல மடங்கு உயர்ந்துவிடும். இறுதி தீர்ப்பில் அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் அப்போது கிடைக்கும் மாபெரும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

ஜெயலலிதாவின் வழக்கால் ஊழல் வழக்கில் சிக்கிய மற்ற அரசியல்வாதிகளுக்கு மறைமுகமாக சொல்லப்படும் செய்தி என்ன?

நமது நாட்டில் நீதிமன்றம் ஒரு சுதந்திரமான அமைப்பாகவும் நடுநிலையானதாகவும் உள்ளது. இந்தியாவில் சிறிய நீதிமன்றம்கூட எவ்வளவு பெரிய பதவி வகிப்பவரை யும் தனது தீர்ப்பால் தண்டிக்க முடியும். ஜெயலலிதா மீதான நிரூபிக் கப்பட்ட குற்றங்கள் மற்றும் தண்ட னைக்கு தடை அல்லது இறுதி தீர்ப்பு வரும்வரை சிறப்பு நீதிமன்றத் தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும், விமர்சிக்கப்படக் கூடாது. இதை விமர்சிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை ஊழல் வழக்கில் தண்டனை பெறும் அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x