Published : 20 Jan 2014 12:15 PM
Last Updated : 20 Jan 2014 12:15 PM
"தங்கள் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் உடை அணிவதாலும், கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாலும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்ற நகரங்களைவிட சென்னையில் குறைவாக உள்ளது."
தமிழக காவல் துறையின் மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி, மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான பாபுலால் கவுர் தெரிவித்த கருத்துதான் இது.
இது குறித்து அவர் கூறும்போது, "சென்னையில் 2012-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 19.31. இதே காலக்கட்டத்தில் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலின் குற்ற விகிதம் 71.38. ஒட்டுமொத்தமாக, மத்தியப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த விகிதம் 71.38 ஆகவே இருக்கிறது.
சமீபத்தில் சென்னைக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள காவல்துறையின் மூத்த அதிகாரிகளிடம் விசாரித்தேன். தங்களது நகரில் உள்ள பெண்கள் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் உடை அணிவதாலும், கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக இருப்பதாகச் சொன்னார்கள்" என்றார் பாபுலால் கவுர்.
பாபுலால் கவுரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் குற்றங்களையும், பெண்கள் உடை அணியும் விதத்தையும் தொடர்புபடுத்துவதுடன், கோயில் செல்லும் வழக்கத்தையும் இதனுடன் சேர்ப்பது சரியான கண்ணோட்டமா?
தமிழகத்தைப் பொறுத்தவரையில், தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து முறைப்படி புகார் அளிக்க முன்வராததன் காரணமாகவே குற்றப்பதிவுகள் குறைவாக இருக்கின்றன என்ற வாதமும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
உங்கள் பார்வை என்ன?
விவாதிக்கலாம் வாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT