Published : 25 Jan 2014 12:24 PM Last Updated : 25 Jan 2014 12:24 PM
முதல்வர் போராட்டம் நடத்துவதை சட்டம் தடை செய்யவில்லை: கேஜ்ரிவால் கருத்து
மாநிலத்தின் முதல்வர் போராட்டத்தில் ஈடுபடுவதை சட்டம் தடை செய்யவில்லை என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியின் சத்ரசால் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கேஜ்ரிவால் பங்கேற்றார்.
அப்போது, கடந்த 20, 21-ம் தேதிகளில் தான் நடத்திய போராட்டம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேஜ்ரிவால் பேசியதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுவதையும் கவனமாகப் படித்துப் பார்த்தேன். அதில் எங்கேயும் மாநில முதல்வர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று குறிப்பிடவில்லை. மக்கள் உரிமைக்காக பொதுநல ஊழியர்கள் போராட்டம் நடத்தலாம். தேவைப்பட்டால் மக்களுக்காக மீண்டும் போராட்டம் நடத்த தயாராக இருக்கிறேன்.
ஜன லோக்பால் மசோதா தயாராக உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் ராம் லீலா மைதானத்தில் டெல்லி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்தி இந்த மசோதாவை நிறைவேற்றவுள்ளோம்.
டெல்லியை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம். தலைமைச் செயலாளர் தலைமையில் 'மகளிர் பாதுகாப்பு தளம்' என்ற அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த அமைப்புக்கு காவல் துறையினருக்கு உள்ள அதிகாரம் இருக்காது. அதே சமயம், முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில்இந்த அமைப்பினர் ஈடுபடுவர். இந்த பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுவர்.
பாலியல் குற்றம் புரிபவர்களை மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சிறைக்கு அனுப்பும் வகையில் இந்தக் குழு செயல்படும்" என்றார் கேஜ்ரிவால்.
WRITE A COMMENT