Published : 24 Jun 2015 08:19 AM
Last Updated : 24 Jun 2015 08:19 AM
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் மீது அக்கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாக அக்கல்லூரி முதல்வர் மீதும் அப்பெண் புகார் கூறியுள்ளார்.
செயின்ட் ஸ்டீபன் கல்லூரி டெல்லி பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் வேதியியல் துறை உதவி பேராசிரியர் சத்தீஷ்குமாரின் வழிகாட்டுதலின் கீழ் மாணவி ஒருவர் முனைவர் பட்டத்துக் கான ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் சத்தீஷ் தனது ஆசைக்கு இணங்கினால் மட்டுமே முனைவர் ஆய்வை முடித்துக் கொடுப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி வந்ததாக அம்மாணவி கூறுகிறார்.
இதுகுறித்து அம்மாணவி அளித்த புகாரில், இதற்கான முயற்சியில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி சத்தீஷ் தன்னிடம் முறை தவறி நடந்துகொண்டதாக கூறியுள்ளார். தனக்கு எதிராக புகார் செய்தால் முனைவர் பட்டம் பெறமுடியாது என்று சத்தீஷ் மிரட்டியதால் ஆய்வை முடிப்பதற்காக பொறுமை காத்ததாக அம்மாணவி கூறுகிறார்.
கடந்த மாதம் தொல்லைகளை பொறுக்க முடியாமல், கல்லூரி முதல்வரிடம் அம்மாணவி புகார் அளித்துள்ளார். இதனை கல்லூரியின் பேராசிரியர்களைக் கொண்ட உள் நிலை புகார் குழுவின் (ஐ.சி.சி) விசா ரணைக்கு முதல்வர் அனுப்பினார். ஆனால் தனது புகார் முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும் இதில் தனக்கு நியாயம் கிடைக்காது என கருதுவதாகவும் குழுவின் தலைவருக்கு இ-மெயில் அனுப்பிய மாணவி புகாரை கடந்த வாரம் திரும்ப பெற்றுக் கொண்டார்.
பிறகு டெல்லி போலீஸில் புகார் அளித்தார். இதில் குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாக அக்கல்லூரி முதல்வர் பாதிரியார் வல்சன் தம்பு மீதும் மாணவி புகார் கூறியுள்ளார். சத்தீஷ் மீதான புகாரை வாபஸ் பெற்று முனைவர் பட்டத்தை பிரச்சினையின்றி முடித்துச் செல்லுமாறு வல்சன் தம்பு மிரட்டியதாக அம்மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரை மறுக்கும் வகையில் பாதிரியார் வல்சன் தம்பு சார்பில் கல்லூரி நிர்வாகம் அறிக்கை வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “முதல்வரை நேரில் சந்தித்த மாணவி தனது புகாரை ஒரு பாலியல் ரீதியாக அன்றி, தனக்கு குறித்த நேரத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை சத்தீஷ் முடித்துக் கொடுக்க மறுப்பதாக கருதவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் முதல்வர் அவரது புகாரின் தீவிரத்தை உணர்ந்து அதை உள்நிலை புகார் குழுவுக்கு பரிந்துரை செய்தார். மாணவிக்கு உதவும் நோக்கத்தில் வேறு ஒரு ஆசிரியரிடம் ஆய்வை முடித்துக் கொள்ளுமாறு முதல்வர் அறிவுரை கூறினார். இதற்கு அம் மாணவி தீர்க்கமாக மறுத்து விட்டார். மிகவும் சுதந்திரமாக செயல்படும் உள்நிலை புகார் குழுவின் முடிவுகளில் முதல்வர் உட்பட எவரும் தலையிட முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.
மாணவியின் புகாரை விசார ணைக்கு ஏற்ற டெல்லி போலீஸார், சத்தீஷ்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி யுள்ளனர். எனினும், முதல்வர் வல்சன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்து இக்கல்லூரி பேராசிரியரும் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவருமான நந்தித்தா நாரயண் கூறும்போது, “சத்தீஷ்குமாரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து விசாரணை நடத்த முதல்வர் தவறி விட்டார்” என்றார்.
1881-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் கல்வி கற்பதே பெருமை யாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை போல், இக்கல்லூரியை டெல்லியின் கேம்பிரிட்ஜ் என்று கூறுவதுண்டு. இங்கு படித்த பலர் மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது, காங்கிரஸ் தலைவர்களான மணிசங்கர் ஐயர், சல்மான் குர்ஷித், கபில் சிபல், சசிதரூர், ராகுல் காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்ட பலர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT