Published : 29 Jan 2017 11:18 AM
Last Updated : 29 Jan 2017 11:18 AM
கடந்த சில வாரங்களில் சமூக ஊடகம் – அதிலும் குறிப்பாக ட்விட்டர் – வாட்ஸப் ஆகியவை – நவீன யுகத்தின் புதிய சக்திகளாக உருவாவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் பெரிய தலைப்புச் செய்திகளையே சமூக ஊடகங்கள் உருவாக்கிவிட்டன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீடோவும் ட்விட்டரில் உரையாடத் தொடங்கி மனித வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாராட்டப்பட்ட (வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்) நாஃப்டா ஒப்பந்தத்தையே அழித்துவிட்டனர். உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிபருக்கும் அதற்குப் பக்கத்திலேயே இருக்கும் மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டின் அதிபருக்கும் நடந்த 280 எழுத்து சொற்போரின் விளைவு இது. இரு நாடுகளுக்கும் இடையில் 1,500 கோடி டாலர்கள் மதிப்பில் கட்டப்படவிருக்கும் தடுப்புச் சுவருக்கு யார் பணம் கொடுப்பது என்பதுதான் சொற்போரின் மையம்.
உங்கள் பார்வையை இப்போது தமிழ்நாட்டுக்குக் கொண்டுவாருங்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுக்கு ஆதரவாக மக்கள் இயக்கத்தை சமூக ஊடகம்தான் தூண்டி, செறிவூட்டி, பரப்பிவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் ட்விட்டர், வாட்ஸப், ஃபேஸ்புக் ஆகியவற்றின் மூலம்தான் தொடங்கப்பட்டது. சர்வதேச செஸ் சாம்பியன் வி. ஆனந்த், கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின், திரைப்பட நாயகர் கமல்ஹாசன், உலகப் புகழ் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற இயக்கம் அது. அந்த இயக்கத்துக்குத் தலைவர்கள் கிடையாது. அரசுடனோ மற்ற அமைப்புகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தவும் யாரும் கிடையாது. மக்களுடைய ஆதரவு பெற்ற இந்த எழுச்சி மின்னியல் சாதனங்கள் வழியாகவே சாத்தியமானது.
இதே காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் என்ன நடந்தது என்று பாருங்கள். உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனம் ‘அமேசான்’, அதன் கனடா நாட்டுப் பிரிவு இந்தியாவின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவர்ண நிறத்தில் கால் மிதியடிகளைத் தயாரித்ததற்காகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டது. இந்தியாவில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்ய அமேசான் தீர்மானித்திருக்கிறது. நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் அந் நிறுவனத்தை எச்சரித்து மன்னிப்பு கேட்க வைத்தார். வெளியுறவு அமைச்சகம் என்பது ராஜதந்திரத்துடன் செயல்பட வேண்டியது. சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாக, ஆனால் எதிராளி மனம் புண்படாமல், நாலு பேருக்கு வெளியே தெரியாமல் சொல்லி முடிப்பது வழக்கம். ஆனால் இந் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறியும் வண்ணம் சுட்டுரை மூலமே வெளிப்படுத்தப்பட்டது.
வாஷிங்டன், மெக்சிகோ, சென்னை, புதுடெல்லி இடையே நடந்த தகவல் பரிமாற்றங்களிலிருந்து சில முடிவுகளுக்கு உங்களால் இப்போது வர முடியும். சமூக ஊடகம் என்பது விவாதிக்கவும், வசை பாடவும் ஏற்பட்ட தகவல் தொடர்பு ஊடகம் என்பதிலிருந்து மாறி, அரசு நிர்வாகத்தை வழிநடத்தவும், பெருந்திரள் ஜனநாயகத்தை உருவாக்கவும், ராஜீய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும் உதவுகிறது. அடுத்தது அரசு நிர்வாகத்துக்கே உரித்தான பொறுமையை நீக்குகிறது, வெளியே யாருக்கும் தெரியாமல் பேசுவது – விடை காண்பது என்ற நாசூக்கான ராஜிய நடவடிக்கைகளுக்கு விடைகொடுக்கிறது, நாகரிகமான வார்த்தைப் பரிமாற்றங்களுக்கு விடை கொடுத்து, ரகசியமாக நடத்தப்பட வேண்டியவற்றைப் பகிரங்கமாக்கிவிடுகிறது, பெருந்திரள் அரசியலில் யாரும் பொறுப்பேற்க வேண்டியதிலிருந்து விடுதலை அளிக்கிறது. தமிழ்நாட்டில் மக்கள் இயக்கம் கட்டுமீறிச் சென்று மோசமான விளைவுகள் ஏற்பட்டிருந்தால் யாரை நீங்கள் பொறுப்பாக்குவீர்கள்?
எப்போதும் நிதானத்துடன், பக்குவத்துடன் செயல்படும் அரசின் தலைவர்களும் ராஜீயத் தூதர்களும் மூத்த அரசியல் அதிகாரிகளும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் சூறாவளியில் சிக்கி இப்படியெல்லாம் செயல்படத் தொடங்கினால் வழக்கமான செய்தி ஊடகங்களுக்கும் இதே பாணியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்ன?
முக்கியமான நேரங்களில் உங்களுக்குப் பிடித்த சேனல்களைத் துழாவிப் பாருங்கள், அன்றைய தினம் சமூக ஊடகத்தில் யார் என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றிய விவாதங்கள்தான் அவற்றில் நடந்து கொண்டிருக்கும். ட்ரம்ப், ட்விட்டரைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் இது மேலும் தீவிரமடையும்.
நானும் உயிரித் தொழில்நுட்ப தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷாவும், தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் கடன் வாங்கியது, பிரிட்டனுக்குத் தப்பி ஓடியது குறித்து ட்விட்டரில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். இருவருக்கும் ஒரே கருத்து இல்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு செய்தி சேனலிலிருந்து அழைப்பு வந்தது, விஜய் மல்லையா கடன் விவகாரம் குறித்து டி.வி. விவாதத்துக்கு வர முடியுமா என்று ட்விட்டர் விவாதம் அங்கே அப்படியே விரிவடைகிறது.
‘எதிரொலி அரங்கு’ என்கிற வார்த்தையை சமூக ஊடகங்களை விமர்சிப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த எதிரொலி அரங்கில் அரசு, அரசியல், பொதுக் கருத்து, விவாதம் என்று எல்லாவற்றைப் பற்றியும் நிரம்பி வழிகிறது. இஸ்ரேல் அணுகுண்டு வீசப்போகிறது என்று யாரோ ஒருவர் வலைதளத்தில் விஷமமாக ஒரு பதிவிட, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் அதைப்பற்றி ஏதும் புரிந்துகொள்ளாமலேயே இஸ்ரேலுக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று கொக்கரித்துவிட்டார். சமூக ஊடகங்களை நான் கண்டிக்கவில்லை, பல ஆண்டுகள் இதைத் தவிர்க்க முயன்றுவிட்டு கடைசியில் இதில் என்னை நானே கரைத்துக் கொண்டுவிட்டேன். சமூக ஊடகத்தில் உங்கள் மீது களங்கம் சுமத்துகிறார்கள் என்றாலும் அதற்குப் பதில் சொல்லவாவது நீங்கள் அதில் இருக்க வேண்டும். ஒரு முறை மெல்பர்ன் நகருக்கு விமானத்தில் சென்றபோது ‘பேர்ட்மேன்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2015-ல் அது 4 அகாடமி விருதுகளைப் பெற்றது. அதில் பேர்ட் மேனாக வரும் மைக்கேல் கீட்டன் தன்னுடைய மகளையும் அவளுடைய தோழிகளையும் சமூக ஊடகங்களிலேயே மூழ்கியிருப்பதற்காகக் கடிந்து கொள்வார். “அப்பா நீங்கள் பிடிவாதமாக உங்களுடைய உலகில் மட்டும் வாழ்கிறீர்கள். ட்விட்டரைக் கேலி செய்கிறீர்கள். உங்களுக்கென்று ஃபேஸ்புக் கூட கிடையாது. சொல்லப் போனால் இன்றைய உலகில் ‘வாழாத’ ஒருவர் நீங்கள் தான்” என்பாள். அதன் பிறகு நானும் சமூக ஊடக உறுப்பினர் ஆனேன். இப்போது பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் என்னைப் பின்பற்றுகின்றனர். ஆனால் என்னுடைய கவலை, இதைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மோசமாக இருக்கப் போகிறதே என்பதுதான்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ்
முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT