Published : 27 Sep 2016 10:07 AM
Last Updated : 27 Sep 2016 10:07 AM
செலவுக்குப் பணம் இல்லாததால் பச்சிளம் பெண் குழந்தையை திரிபுரா பழங்குடியின தம்பதி, ரூ.650-க்கு விற்பனை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுராவில் பழங்குடியின மக்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றனர். மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ள திரிபுராவில் உணவு உட்பட அடிப்படை வசதிகளுக்கு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் உள்பகுதியில் அமைந்துள்ள தலாய் மாவட்டத்தில் உள்ள ஒரு தம்பதி தங்களது பெண் குழந்தையை ரூ.650-க்கு விற்றுள்ளனர். இத்தகவல் உள்ளூர் பத்திரிகையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுதீப் ராய் பர்மன் கூறியதாவது:
திரிபுராவில் பழங்குடியினத்தவர்கள் வாழ்வதற்கே சிரமப்படுகின்றனர். அந்த குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளது. உணவுக்கே அவர்கள் கஷ்டப்படுகின்றனர். குழந்தைக்குப் பால் உட்பட எதை வாங்கவும் அவர்களிடம் பணம் இல்லை. அதனால் குழந்தையை விற்கின்றனர்.
திரிபுராவில் இதுபோல் பல சம்பவங்கள் நடக்கின்றனர். உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியானதால் இப்போது வெளியில் தெரிகிறது. ஆனால், அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த உண்மைகளை மூடி மறைக்கின்றனர். மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இரக்கமில்லாமல் அரசு நடந்து கொள்கிறது.
மக்கள் வறுமையில் வாடுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட கண்டாசெரா பகுதியில் ஒரு குழந்தையை பெற்றோர் விற்றுள்ளனர். தற்போது குழந்தையை விற்ற பெற்றோர் கைது செய்யப்பட்டாலும், அந்தக் குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை.
இவ்வாறு எம்எல்ஏ சுதீப் ராய் பர்மன் கூறினார்.
கடந்த 18-ம் தேதி ஹரிதா திரிபுரா, இவரது கணவர் சரண் திரிபுரா இருவரும் தங்களது இரண்டரை வயது பெண் குழந்தையை ரீட்டா சக்மா என்பவருக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருதரப்பு ஒப்புதலின்படியும் குழந்தையின் கல்வி, வளர்ச்சியை கருத்தில் கொண்டும்தான் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT