Published : 17 Nov 2013 03:01 PM
Last Updated : 17 Nov 2013 03:01 PM
முசாபர்நகர் முஸ்லிம்களுடன் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு கொண்டுள்ளது என்ற பேசியதற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரே ராகுல் காந்தியின் பேச்சை கடுமையாக விமர்சித்திருப்பது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மையத்தில் உருது ஊடகத்தினருடன் ஜெய்ராம் ரமேஷ் பேசும்போது, "ராகுல் என்ன சொன்னாரோ, அதை என்னால் சொல்ல முடியாது. அவர் அப்படிச் சொன்னதற்கு உரிய விளக்கத்தைத் தருவதுடன் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ராகுல் காந்தி மதசார்பற்றவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த விஷயத்தில் நம்பத்தன்மை குறித்து சந்தேகமே தேவையில்லை. அவர் உண்மையாகவே சிறுபான்மையினர், நலிந்த பிரிவினர், தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார். ஆனால், அவர் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்" என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
காங்கிரஸ் அதிர்ச்சி
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் கருத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள காங்கிரஸ், அது அவரது சொந்தக் கருத்து; காங்கிரஸ் கட்சியுடையது அல்ல என்று விளக்கம் தந்துள்ளது. மேலும், ராகுல் காந்தி தனது பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மீம் அப்சல் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய ராகுலின் பேச்சு
முன்னதாக, ராஜஸ்தானிலும் இந்தூரிலும் நடந்த நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, முஸாபர்நகர் முஸ்லிம்களுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில், ராகுல் காந்தியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. அதற்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதையும் தான் மீறவில்லை என்று ராகுல் காந்தி பதில் அனுப்பியிருந்தார். தான் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி 4 நாள்களுக்கு முன் 8 பக்கங்களில் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், ராகுலின் பதில்களைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளது.
தங்களது பேச்சின் அடிப்படை நோக்கம் மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக ஏற்றுக்கொண்டாலும், சில கருத்துகளின் தன்மையும் பொருளும் சாரமும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை என்று 5 பக்க உத்தரவில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை என்ற அறிவுறுத்தப்படுகிறது என ராகுலுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT