சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா நாளை (அக்.30) பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இதே வழக்கில் சுதாகரன், இளவரசி, சசிகலா ஆகியோரது கோரிக்கையை நிராகரித்தது. அவர்களை நாளை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என புதிய நீதிபதி முடி கவுடர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா, சுதாகரன், சசிகலா, இளவரசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரும் இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், பாப்டே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிந்ததை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சேகர் நாப்டே சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தற்போது தமிழக சட்டப்பேரவை நடைபெறுவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பெங்களூரு நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் விசாரணைக்கு ஜெயலலிதா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.
அதேநேரத்தில், சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலா ஆகியோர் நாளைய விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அவர்கள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT
Be the first person to comment