Published : 20 Feb 2014 11:47 AM
Last Updated : 20 Feb 2014 11:47 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்ட னையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அவர்களின் கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் தாமதம் செய்ததால், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அதோடு, மூவரும் 23 ஆண்டு களாக சிறையில் உள்ளதால், அவர்களை விடுவிப்பது தொடர்பாக தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், முருகன், சாந்தன் பேரறிவாளனை விடுவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை அறிய கடிதம் எழுதுவது என்றும், பதிலேதும் வராதபட்சத்தில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதோடு, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜரானார். அவர் கூறும்போது, “முருகன் உள்ளிட்ட மூவருக்கும் தண்டனை குறைப்பு அளிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முடிவு தெரியாத நிலையில் மூவரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்கும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
மூவரையும் விடுவிக்கும் விவகாரத்தில் சட்ட ரீதியான நடைமுறைகளை மாநில அரசு பின்பற்றவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தை நீதிமன்றம் ஆய்வு செய்யும். அதே சமயம், மூவரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை மறுக்கவில்லை. ஆனால், உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இது போன்ற விவகாரங்களில் தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநில அரசுகளும் சட்ட நடைமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.
மத்திய அரசின் மனு தொடர்பாக தமிழக அரசு 2 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 7 பேரும் தங்கள் தரப்பில் 2 வாரங்களில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 4 பேர் தொடர்பாக மத்திய அரசு புதிதாக மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.
முன்னதாக மூவரையும் விடுவிக்க தடை விதிக்கக் கூடாது என்று தமிழக அரசு வாதிட்டது.
அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து மதிப்பிடவில்லை. சட்ட ரீதியான நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்துத்தான் நாங்கள் ஆய்வு செய்யவுள்ளோம்” என்றனர்.
தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, சட்டப்படி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது: “ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான 7 பேரும் தடா, ஆயுதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்றுள்ளனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435-ன் படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மன்னித்து விடுவிப்பதற்கு முன்பு, அது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது.
அதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து தண்டனை விதித்த நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்ட பின்புதான் அவர்களை விடுவிக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
சிபிஐ விசாரணை செய்த வழக்கு தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவாக இருந்தாலும், அது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவது அவசியம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த 7 பேரை பொறுத்தவரை மத்திய அரசின் சட்டத்தின் கீழ்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு தெரிவிக்கும் கருத்துதான் மேலோங்கியிருக்கும். முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவு நீதித்துறை கொள்கைகளுக்கு முரணானது; சட்டப்படி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT