Published : 16 Dec 2013 10:14 AM
Last Updated : 16 Dec 2013 10:14 AM
லோக்பால் மசோதாவில் குறைபாடு இருப்பதாக கருதுபவர்கள் அதை சரி செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கலாமே என்று ஆம் ஆத்மி கட்சிக்கு யோசனை தெரிவித்துள்ளார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே.
லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி 6ம் நாளாக உண்ணாவிரதம் தொடரும் அன்னா ஹசாரே, நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ள லோக்பால் மசோதா பலவீனமானது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்த கருத்தை நிராகரித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் கூறியதாவது:
மசோதாவில் உள்ள அம்சங்களை வாசித்தேன். மசோதாவில் குறைபாடு இருப்பதாக நீங்கள் (கெஜ்ரிவால்) கருதினால் அதற்காக உண்ணாவிரதம் இருக்கலாம். பல்வேறு பிரச்சினைகளுக்காக நான் முன்பு போராடியவற்றுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. சிபிஐ மீதான அரசின் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல 13 விவரங்களை நான் பார்த்தேன். இந்த மசோதாவை வரவேற்பதாக அரசுக்கு தெரிவித்துள்ளேன்.
இந்த மசோதா நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்தரத்தக்கது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்த அரசுக்கு எனது நன்றியை தெரிவித்தேன். இந்த கூட்டத்தொடரிலேயே இரு அவைகளிலும் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும். தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தின் காலத்தை நீட்டிக்க வேண்டும்.
இத்தகைய நிலைமை வராது என்பதே எனது நம்பிக்கை திங்கள்கிழமை மாநிலங்களவையில் முதலில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது இந்த மசோதா என்று கூறுகிறார்கள். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
சில கட்சிகள் எதிர்த்தால் அதை பொருட்படுத்தாமல், அமளி செய்தாலும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இந்த கூட்டத் தொடர் நிறைவடைய இன்னும் 5 நாள்கள் உள்ளதால், மனம் இருந்தால் இந்த காலஅவகாசத்திலேயே இரு அவைகளிலும் மசோதாவைக் கொண்டு வர முடியும். காலம் போதவில்லை என்றால் கூட்டத் தொடரை சில நாள்கள் நீட்டிக்கலாம்.
மசோதா நிறைவேறினால் உண்ணாவிரதம் வாபஸ்
மசோதா நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளமாட்டேன். நாடு, சமுதாயத்துக்காகவே நான் வாழ விரும்புகிறேன். நிராகரிக்கும் உரிமை, மீண்டும் அழைக்கும் உரிமை ஆகியவற்றை இனி கையில் எடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் ஹசாரே.
‘மசோதாவை கெஜ்ரிவால் மீண்டும் படிக்கட்டும்: கிரண் பேடி
இந்த மசோதா பலவீனமானது என்று சொல்பவர்கள் அதை சரியாக படிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
மசோதாவின்படி ஏதாவது ஒரு விவகாரம் சிபிஐ வசம் கொடுக்கப்பட்டால் அதில் அரசு தலையிடக்கூடாது. கெஜ்ரிவால் மசோதாவை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். படிக்காமல் அது பற்றி கேலி செய்வதைத் தவிர்த்து படித்து பார்த்து முடிவுக்கு வரவேண்டும்.
டெல்லிக்கு திங்கள்கிழமை சென்று மாநிலங்களவை நடவடிக்கைகளை கவனிக்க உள்ளேன். அங்கு என்ன நடக்கிறது என்பதை ஹசாரேக்கு தெரிவிப்பேன் என்றார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT