Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM

மனைவி, மகன், மகளைக் கொன்று உளவுப் பிரிவு அதிகாரி தற்கொலை

டெல்லியில் ‘ரா’ உளவுப் பிரிவு அதிகாரி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரும் அந்த வீட்டில் இறந்து கிடந்தனர்.

தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு அந்த அதிகாரி தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அனன்யா சக்ரவர்த்தி (52) இந்திய உளவுத்துறையான ரிசர்ச் அண்டு அனலிஸிஸ் விங் (ரா)-இல் ஆய்வாளர் நிலை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அவர் கடைசியாக அமைச்சக செயலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

தெற்கு டெல்லியில் சாதிக் நகரில் அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மின்விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

பள்ளி ஆசிரியையான அவரது மனைவி ஜெய், மகள் திஷா (12) ஆகியோர் அனன்யா சக்ர வர்த்தியின் அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையில் தரையில் பிணமாகக் கிடந்தனர். மகன் அர்னாப் (17) வேறொரு அறையில் பிணமாகக் கிடந்தார்.

சக்ரவர்த்தியின் மனைவி மற்றும் குழந்தைகளின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. வீடு முழுக்க ஆங்காங்கு ரத்தம் சிதறிக் கிடந்தது. வீடு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. வீட்டு வேலைக்காரப் பெண் அழைப்பு மணியை வெகுநேரம் அழுத்தியும் யாரும் திறக்கவில்லை. அப்பெண், பாதுகாவலரிடம் இதுகுறித்து தெரிவிக்க அவரும் கதவைத் தட்டி திறக்கும்படி கூறியுள்ளார். பதில் வராமல் போகவே, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த காவல்துறையினர் வீட்டுக் கதவை உடைந்து உடல் களை மீட்டனர். தடயவியல் துறை யினர் அங்கு தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். “இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவே நடைபெற்றிருக்க வேண்டும். மற்ற மூவரையும் கொன்றுவிட்டு அனன்யா தற்கொலை செய்து கொண் டிருக்கலாம். எனினும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே முழு விவரங்களும் தெரியவரும்” என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x