Published : 14 Dec 2013 05:49 PM
Last Updated : 14 Dec 2013 05:49 PM

லோக்பால் மசோதாவை ஆதரியுங்கள்: அனைத்துக் கட்சிகளுக்கும் ராகுல் கோரிக்கை

லோக்பால் மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டிசம்பர் 10-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் அந்த மசோதா திங்கள்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக ராகுல் காந்தி டெல்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஊழலுக்கு எதிராகப் போராட வலுவான லோக்பால் மசோதா தேவை என்று உணர்ந்து அந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த வகையில் 99 சதவீத பணிகள் முடிந்துள்ளன. ஒரே ஒரு சதவீதம்தான் பாக்கி உள்ளது. அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்சிகள் ஒத்துழைப்பு நல்கினால்தான் லோக்பால் மசோதாவை சட்டமாக்க முடியும்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துவிட்டதால் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் திடீரென அவசரப்படுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது. தேர்தல் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை. அதுதொடர்பாக இப்போது விவாதம் நடத்துவதும் தேவையற்றது.

லோக்பால் மசோதா நாட்டுக்கு நல்லது என்ற வகையிலேயே அதனை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளோம். ஊழல் தடுப்புக்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

தேர்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு லோக்பால் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த திருத்தப்பட்ட மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை கொண்டு வரப்படுகிறது.

தேசநலன் கருதி சிறு கருத்து வேறுபாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

லோக்பால் மசோதாவுக்கு சமாஜவாதி கட்சி எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேட்டபோது மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பதிலளித்தார். சில கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் எந்தக் கட்சியும் லோக்பால் மசோதா வேண்டாம் என்று கூறவில்லை. கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

லோக்பால் வரம்பில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற யோசனையை ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

மேலும் சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுப்பதையும் லோக்பால் வரம்பில் கொண்டு வர முடியாது. சிபிஐ இயக்குநர் தேர்வு முறை தொடர்பாக சட்ட விதிகள் உள்ளன. அந்த சட்டவிதிகளே இனிமேலும் பின்பற்றப்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், லோக்பால் அமைப்பின் கீழ் சிபிஐ செயல்படும் என்று தெரிவித்தார்.

ராகுல் பதில் அளிக்க மறுப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது பேட்டியளித்த ராகுல் காந்தி, ஆம் ஆத்மியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது ராகுல் காந்தி பதில் அளிக்கவில்லை. அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக்கான், லோக்பால் மசோதா குறித்து மட்டுமே கேள்வி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x