Last Updated : 02 Oct, 2014 10:53 AM

 

Published : 02 Oct 2014 10:53 AM
Last Updated : 02 Oct 2014 10:53 AM

பிஹாரில் அமைச்சரை உயிருடன் எரிக்க முயற்சி: வன்முறையில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு, 6 பேர் கைது

பிஹாரில் நவராத்திரி விழாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, ஒரு கும்பல், விழாவில் பங்கேற்ற அமைச்சரை உயிருடன் கொளுத்த முயன்றது. இந்த அதிர்ச்சிகர சம்பவம், பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள சசாராம் நகரில் புகழ்பெற்ற தாராச்சண்டி கோயில் வளாகத்தில் நடந்தது.

இக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை மாலை கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் வினய் பிஹாரி பங்கேற்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.கே.ஜா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தன் குமார் குஷ்வாகா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அமைச்சர் வினய் பிஹாரி, நாட்டுப்புற இசைக் கலைஞர் என்பதால், சில பாடல்கள் பாடி விழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் விழாவில் ஒலிபெருக்கி மற்றும் இருக்கை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்று பார்வையாளர்கள் ஆத்திரம டைந்தனர். இதில் சிலர் மேடை மீது நாற்காலிகளை வீசத் தொடங்கி னர். இதில் ஒரு நாற்காலி எஸ்.பி. குஷ்வாகா மீது விழுந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீஸார் அவர்களை தடியால் அடித்து விரட்டத் தொடங்கினர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கும்பல் போலீஸார் மீதும் மேடை மீதும் கற்களை வீசத் தொடங்கியது. நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை உணர்ந்த அமைச்சரும் அதிகாரிகளும் அங்கிருந்து தப்பியோடினர். இந்நிலையில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமைச்சரின் அரசு கார் தீவைத்து கொளுத்தப்பட்டது. மேலும் சில வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் தடியடி மற்றும் வன்முறையில் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

2 மணி நேரம் பதுங்கியிருந்த அமைச்சர்

இச்சம்பவம் குறித்து மறுநாள் காலை அமைச்சர் வினய் பிஹாரி கூறும்போது, “மேடைக்கு அடியில் சுமார் 2 மணி நேரம் நான் பதுங்கியிருந்தேன். சிலர் பெட்ரோல் கேனுடன் என்னை தேடிக்கொண்டிருப்பது என் காதில் விழுந்தது. நான் வெளியில் வந்திருந்தால் அக்கும்பல் என்னை உயிருடன் கொளுத்தியிருக்கும். பின்னர் அங்கிருந்து நான் தப்பிச்சென்ற பின் மேடையும் கொளுத்தப்பட்டது” என்றார்.

அமைச்சர் மேலும் கூறும்போது, “அருகில் அதிகாரிகளின் கார்கள் எல்லாம் இருக்கும்போது எனது கார் மட்டும் கொளுத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதி. இதுகுறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கு முதல்வர் உத்தரவிடவேண்டும்” என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 6 பேரை கைது செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஆர்.கே.ஜா கூறும்போது, “அமைச்சரின் வருகை குறித்து தாமதமாக தகவல் தெரிவித்ததால் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யமுடியவில்லை” என்றார்.

ஆனால் தனது பயணம் குறித்து 1 மாதத்துக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x