Published : 19 Oct 2014 11:41 AM
Last Updated : 19 Oct 2014 11:41 AM
ஏழைகளின் வாழ்க்கையோடு விளையாடும் மருத்துவர்களின் கைகளை வெட்டுவேன் என்று தான் தெரிவித்திருந்த கருத்துக்கு பிஹார் மாநில முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிஹாரில் நேற்று முன்தினம் பாக்ரி தயல் எனும் இடத்தில் 70 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையை மாஞ்சி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘ஏழைகளின் வாழ்க்கையோடு விளையாடும் மருத்துவர்களின் கைகளை வெட்டுவேன்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இவரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பும் கண்டனங்களும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரு விழாவில் கலந்துகொண்ட ஜித்தன்ராம் மாஞ்சி, தான் கூறிய கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "இந்தி மொழியில் கைகளை வெட்டுதல் என்பன போன்ற சில பழமொழிகள் இருக்கின்றன.
இவற்றின் அர்த்தம் நேரடியாக ஒருவரின் கைகளை வெட்டுவது என்பது அல்ல. நான் அப்படியான பழமொழியைத்தான் சொன்னேன். 90 சதவீத மருத்துவர்கள் நல்ல முறையில் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கிறார். 10 சதவீத மருத்துவர்கள்தான் தங்களின் கடமையை ஒழுங்காகச் செய்வதில்லை.
என்னுடைய வருத்தம் எல்லாம் அந்த 10 சதவீதத்தினர் மீதுதான்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT