Published : 13 Nov 2013 09:11 PM
Last Updated : 13 Nov 2013 09:11 PM
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி வெளியிட்ட சில கருத்துகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) அதிருப்தி வெளியிட்டது.
ராஜஸ்தானிலும் இந்தூரிலும் நடந்த நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, முஸாபர்நகர் முஸ்லிம்களுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில், ராகுல் காந்தியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. அதற்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதையும் தான் மீறவில்லை என்று ராகுல் காந்தி பதில் அனுப்பியிருந்தார். தான் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி 4 நாள்களுக்கு முன் 8 பக்கங்களில் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், ராகுலின் பதில்களைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளது.
தங்களது பேச்சின் அடிப்படை நோக்கம் மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக ஏற்றுக்கொண்டாலும், சில கருத்துகளின் தன்மையும் பொருளும் சாரமும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை என்று 5 பக்க உத்தரவில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டதாக சில கருத்துகள் இல்லை என்றே ஆணையம் கருதுகிறது. பல்வேறு மத அமைப்புகளுக்கு இடையில் வேறுபாடுகளை தூண்டும்வகையில் பேசுவதையும், வெற்றுக் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு பிற கட்சிகளை விமர்சிப்பதையும் நடத்தை நெறிகள் அனுமதிப்பதில்லை என்றும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை என்ற அறிவுறுத்தப்படுகிறது என ராகுலுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தனது சர்ச்சைக்குரிய பேச்சை நியாயப்படுத்திய ராகுல் காந்தி தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT