Published : 05 Oct 2014 11:42 AM
Last Updated : 05 Oct 2014 11:42 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை சக்கரத்தாழ்வாருக்கு கோயில் குளத்தில் புனித ஸ்நானம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து மாலையில் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டதுடன் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற பிரம் மோற்சவ விழா நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது. மேலும் இம்முறை தங்க ரதம் மற்றும் மகாரதம் என இரு ரதங்களில் உற்சவர்கள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இவ்விழாவின் நிறைவு நாளான நேற்று காலை, உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோர் பல்லக்குகளில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் வராக சாமி கோயில் அருகே பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சக்கரத் தாழ்வாருக்கு கோயில் குளத்தில் புனித ஸ்நானம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கத்துடன் கோயில் குளத்தில் நீராடினர். பின்னர் மாலை ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் முன்னிலையில் தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்ட பிரம்மோற்சவ கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தேவஸ்தான சிறப்பு நிர்வாக குழு தலைவர் ஜகதீஷ் சந்திர ஷர்மா, தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், இணை நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீநிவாச ராஜு, போலா பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
9 நாட்களில் ரூ. 20 கோடி காணிக்கை
கடந்த 9 நாட்களாக நடைபெற்ற ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்கள் ரூ. 20.18 கோடியை உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். இதுகுறித்து நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழுமலையானின் பிரம் மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த 9 நாட்களில் மட்டும் 21.27 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டன. விழா நாட்களில் தங்கும் விடுதி களுக்கான வாடகையாக மட்டும் ரூ. 1.45 கோடி வருவாய் கிடைத் துள்ளது. உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ. 20.18 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இது தவிர பக்தர்கள் தலை முடி காணிக்கையாக ரூ.3.55 லட்சம் செலுத்தி உள்ளனர். இதில் கருட சேவை நாளன்று மட்டும் 6 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இவ்வாறு எம்.ஜி. கோபால் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT