Published : 14 Nov 2013 09:00 AM
Last Updated : 14 Nov 2013 09:00 AM
இலங்கையில் இன்று துவங்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை மத்திய அரசு தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதை அதன் தேசிய செய்தித் தொடர்பாளரும், தமிழரு மான நிர்மலா சீத்தாராமன் கேள்வி யாக புதன்கிழமை எழுப்பினார்.
இதுபற்றி அவர் ‘தி இந்து’ நாளிதழிடம் பேசுகையில், ‘தமிழக மக்களாலும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நம் நாட்டின் பிரதமர், தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிறைந்த நாட்டில் நடக்கும் காமன்வெல்த் கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணத்தை அவசியம் விளக்க வேண்டும்.
இவர் அந்தக் கூட்டத்திற்கு போவாரா, இல்லையா என்பது குறித்து மாநாட்டை நடத்தும் நாட்டிற்குத்தான் முதலில் தெரியப்படுத்துவது மரபு என வெளியுறவுத்துறை கூறியதும் நியாயமே அல்ல" எனத் தெரி வித்தார்.
மேலும் அவர், ‘தமிழக மக்க ளின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில், தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியதை மதித்து, அதன் உணர்வை ஏற்கும் வகையில் பிரதமர் தன் இலங்கை பயணத்தை ரத்து செய்யவில்லை. ஏனெனில், இதுகுறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் தன் பயணம் ரத்து செய்ததற்கானக் காரணத்தை அவர் கூறவில்லை. அவர் நாட்டு மக்களுக்கும் இதைச் சொல்ல வில்லை." எனக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் காரணத்திற்காக இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகப் புகார் கூறிய நிர்மலா, அதன் காரணமாக, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கூட்டணி வைக்க இருக்கும் திமுகவிற்காக இதைச் செய்திருக்கலாம் எனக் கருத்து கூறினார். பிரதமருக்கு பதிலாக இலங்கை சென்றுள்ள வெளியுறத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், காமன்வெல்த் மாநாட்டில் பேச வேண்டியவை பற்றியும் நிர்மலா வலியுறுத்தினார்.
அதில், ‘இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் சிக்கல் ஏன்? போர் ஓய்ந்த பின்பும் அந்த மக்கள் இன்னும் முகாம்களில் இருப்பது ஏன்? இவர்களுக்கு வீடு கட்டுவதற்காக இந்தியா செய்த நிதி உதவியின் வரவு செலவு கணக்கு என்ன என்பது உட்பட தமிழக மீனவர்கள், மீன் பிடிக்கச் செல்லும்போது பாதிக்கப்படும் கேள்விகளையும் ராஜபக்சேவிடம் சல்மான் கேள்வி எழுப்பி பதில்களை பெற வேண்டும்’ என நிர்மலா வலியுறுத்தினார்.
பதவியில் இருக்கும்போது, சந்தர்ப்பவாதியாக செயல்படுவ தாக காங்கிரஸ் மீது நிர்மலா புகார் கூறினார். இதை எதிர்த்து தமிழகத்தில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்டு வந்த காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், பிரதமரிடமும் சோனியாவிடமும் கேள்வி எழுப்பாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
‘காமன்வெல்த் மாநாடு குறித்து கடைசி வரை பாஜக கருத்து சொல்லாதது ஏன்?’ எனக் கேட்ட போது அவர், ‘இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம் எனவும், இதில் பாஜக பதில் சொல்லத் தேவையில்லை’ எனவும் பதில ளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT