Published : 23 Dec 2013 06:43 PM
Last Updated : 23 Dec 2013 06:43 PM

நீதிபதிகள் குழுவை அமைத்திருக்கத் தேவையில்லை : முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி உச்ச நீதிமன்றத்துக்குக் கடிதம்

பயிற்சி பெண் வழக்கறிஞருக்கு பாலியல் துன்புறுத்தல் எதையும் நான் செய்யவில்லை. இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் சார்பில் குழு அமைக்கப்பட்டதற்கு தேவையே இல்லை. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை சரியாக அணுகவில்லை என்று முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி, தன்னிடம் பயிற்சி வழக்கறிஞராக இருந்த பெண் ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க, 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகக் கூறப் படும் குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் உள்ளது. எனினும், சம்பவத்தின்போது, ஏ.கே. கங்குலி ஓய்வு பெற்றுவிட்டதால், அவர் மீது உச்ச நீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எதையும் எடுக்க இயலாது என்று அந்த குழுவினர் தெரிவித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, தற்போது மேற்குவங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக இருக்கும் ஏ.கே.கங்குலியை, அப்பதவி யிலிருந்து அகற்ற வேண்டும் எனக் கோரி சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், தனது தரப்பு கருத்தை தெரிவிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு 8 பக்க கடிதத்தை ஏ.கே.கங்குலி அனுப்பியுள்ளார். அக்கடிதத்தின் நகலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஏ.கே.கங்குலி கூறியுள்ளதாவது: “சமீபத்திய சில நிகழ்வுகளால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை சரியாக அணுகவில்லை.

பயிற்சி பெண் வழக்கறிஞருக்கு பாலியல் துன்புறுத்தல் எதையும் நான் செய்யவில்லை. எனது பணி காலத்தில் ஏராளமான ஆண் மற்றும் பெண் பயிற்சி வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளேன். இப்போது வரை அவர்கள் என் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

நான் நீதிபதியாக பணியாற்றிய போது, மிகவும் வலிமை வாய்ந்தவர் களுக்கு எதிராக சில தீர்ப்புகளை அளித்துள்ளேன். அதனால், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் வகையில் இதுபோன்று திட்டமிட்டு சிலர் எனக்கு எதிராக செயல்படுவதாகக் கருதுகிறேன்.

மூவர் குழு தேவையற்றது:

அந்த பயிற்சி பெண் வழக்க றிஞரின் பெயர், உச்ச நீதிமன்றத்தின் பயிற்சி வழக்கறிஞர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. சம்பவத்தின்போது நான் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். இது போன்ற சூழ்நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் சார்பில் 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்தியிருக்கவே தேவையில்லை.

இந்த குழுவை அமைப்பதற்கு முன்பு, உச்ச நீதிமன்றத்திடமோ, தலைமை நீதிபதியிடமோ அந்த பெண் புகார் எதையும் தெரிவிக்க வில்லை. குழுவை அமைத்த பின்பு தான், விசாரணையில் ஆஜராகி அந்த பெண் தனது வாக்குமூலத்தை அளித்தார்.

முன்னதாக அந்த பெண் இணையத்தின் வலைப்பூவில் (‘பிளாக்’) தனது புகாரை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்ப டையில் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. அந்த தகவல் சரியானதுதானா என்பதை ஆராயாம லேயே அட்டர்னி ஜெனரல் கொடுத்த மனுவின் பேரில் நீதிபதிகள் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

அந்த பெண் குற்றம் சாட்டியது பணியில் உள்ள நீதிபதியைப் பற்றித்தானா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகத்தான் விசாரணைக் குழு அமைத்ததாகக் கூறும் வாதமும் ஏற்புடையதல்ல.

ஏனெனில், ஓய்வு பெற்ற நீதிபதிதான் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த பெண் தெளிவாக தனது வலைப்பூவில் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்றத்துக்குள் நான் நுழைந்ததுமே, என்னை நீதிமன்ற அலுவலர்கள் ஏதோ சிறைப்பிடிப்பது போல சூழ்ந்து கொள்கின்றனர். இதுபோன்ற நிலையை இதற்கு முன்பு நான் சந்தித்ததில்லை. அலுவலர்களின் இந்த செயல்பாடு ஏற்புடையது அல்ல” என்று ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x