Published : 25 Dec 2013 09:14 AM
Last Updated : 25 Dec 2013 09:14 AM
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடந்த அதே ராம்லீலா மைதானத்தில் டெல்லியின் முதல்வராக நாளை (வியாழக்கிழமை) அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.
இதற்கான அனுமதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்து டெல்லி துணைநிலை ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் தொடர்ச்சியாக டெல்லி தலைமைச் செயலாளர் டி.எம்.சபோலியா செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரை சந்தித்துப் பேசினார்.
அப்போது கேஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பேசியதுடன், அவருக்காக அரசு பங்களா தயாராக இருப்பதையும் தெரிவித்தார்.
இது குறித்து கேஜ்ரிவால் வீட்டின் முன்பு காத்திருந்த நிருபர்களிடம் பேசிய சபோலியா, தனக்கு அரசு பங்களா வேண்டாம் எனவும், தற்போது வசிக்கும் காஜியாபாத்தின் கொசாம்பி பகுதியில் உள்ள அடுக்கு மாடி வீட்டிலேயே தங்கிக் கொள்வதாகவும் கேஜ்ரிவால் கூறியதாகத் தெரிவித்தார்.
டெல்லி முதல்வருக்கான ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும் தனக்கு வேண்டாம் என கேஜ்ரிவால் ஏற்கெனவே மறுத்திருக்கிறார்.
பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள்
ராம்லீலா மைதானத்தில் கேஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு சார்பில் சிறப்பு அழைப்புகள், ‘விவிஐபி பாஸ்’ போன்றவை தேவை இல்லை என கேஜ்ரிவால் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அரசியலில் இதுவரை இல்லாத வகையில் இந்த பதவி ஏற்பு விழா, மிகவும் எளிமையாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜ்ரிவாலுடன் 6 பேர்
கேஜ்ரிவாலுடன் சேர்த்து ஆறு பேர் அமைச்சரவை உறுப்பினர்களாக பதவி ஏற்பார்கள் என தெரிகிறது. இந்த பட்டியலில், முன்னாள் பத்திரிகையாளரான மணீஷ் சிசோடியா, தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் பொதுபணித்துறை அமைச்சர் ராஜ்குமார் சௌகானை தோற்கடித்த ராக்கி பிர்லா, மற்றொரு அமைச்சரான கிரண்வாலியாவை தோற்கடித்த சோம்நாத் பாரதி, சௌரவ் பரத்வாஜ், கிரிஷ் சோனி மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை எப்படி நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதாவின்படி, மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பதும் கேஜ்ரிவால் முன் உள்ள சவால் மிக்க முக்கிய பணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT