Published : 08 Jan 2014 12:57 PM
Last Updated : 08 Jan 2014 12:57 PM
டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் சுமார் 40 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக ‘இந்து ரக் ஷா தளம்’ அமைப்பைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தின் கௌசாம்பி பகுதியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் வீடு உள்ளது. இதை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு புதன்கிழமை காலை திடீர் என ஒரு கும்பல் வந்தது.
முதலில் ஆம் ஆத்மி கட்சி, அதன் மூத்த தலைவர்கள் பிரஷாந்த் பூஷண் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியவர்கள், வெளியே இருந்த சில பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தனர். பிறகு அலுவலகத்தின் உள்ளேயும் சென்றும் சூறையாடினர். இதை தடுக்க முயன்ற சில ஆம் ஆத்மி கட்சியினர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
பிரஷாந்த் பூஷணின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கிருந்த நிருபர்களிடம் பேசிய இந்து ரக் ஷா தளத்தின் நிர்வாகி விஷ்ணு குப்தா கூறுகையில், ‘பிரஷாந்த் பூஷன் ஒரு துரோகி. ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அவரது கருத்துகள் தேச விரோதமானது. இதுபோன்றவர்களை நாம் சுதந்திரமாக நடமாடவிட்டால், நம் நாடு தன் மதிப்பை இழந்து விடும். அங்கிருந்து ராணு வத்தை வாபஸ் வாங்குவது என்பது ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுப்பது போலாகும்.’ எனத் தெரிவித்தார்.
இது குறித்து காஜியாபாத் காவல் துறை சிறப்புக் கண்காணிப்பாளர் தர்மேந்திரா சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாக்குதல் நடத்தியவர்கள் இங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரை வில் அனைவரையும் கைது செய்வோம். இனி, ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மற்றும் முதல் அமைச்சரின் வீட்டிலும் போலீஸார் அமர்த்தப்படுவார்கள். இதற்காக அவரிடம் மீண்டும் வலியுறுத்தப் படும்’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்து ரக் ஷா தளத்தின் தேசிய அமைப்பாளர் பிங்கி சௌத்ரி உட்பட 12 பேர் சாஹிபாபாத்தில் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கட்சி ஆதரவு தராது. அதேசமயம் பிரசாந்த் பூஷண் நம் நாட்டின் பகுதியான காஷ்மீர் மீது கூறிய கருத்துகளையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கருத்துகளையும் பாஜக வன்மையாகக் கண்டிப்பதாகவும் நிர்மலா கூறினார்.
காஷ்மீர் பிரச்சினை தீர உயிரை விடவும் தயார்
தனது கட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் அர்விந்த் கேஜ்ரிவால் புதன்கிழமை கூறியதாவது:
“என்னையும், பிரசாந்த் பூஷணையும் கொல்வதால் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விடும் எனக் கருதினால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை கொல்ல விரும்புபவர்கள், எந்த இடத்துக்கு, எப்போது வர வேண்டும் என்பதை தெரிவித்தால் அங்கு செல்லத் தயாராக இருக்கிறோம். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்பதே எங்களின் கருத்து. பிரசாந்த் பூஷண் கூறிய கருத்தை தவறாகப் புரிந்து கொண்டு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுமக்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கென இறைவன் படைகளை எதுவும் அமைக்க மாட்டார். இது போன்ற தாக்குதலை நடத்துவது கடவுள் ராமனின் கொள்கைகளுக்கே எதிரானது. நானும் இந்து மதத்தைச் சேர்ந்தவன்தான்” என்றார் கேஜ்ரிவால்.
கட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் குறித்து பிரசாந்த் பூஷண் கூறியதாவது: “தாக்குதலை நடத்தி இந்து ரக் ஷா தளத்தைச் சேர்ந்தவர்கள், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவாளர்கள். தாக்குதலில் ஈடுபட்ட விஷ்ணு குப்தா, இதற்கு முன்பும் என்னை ஒருமுறை தாக்கியுள்ளார். மற்றொருவரான தேஜிந்தர் கண்ணா, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி வளர்ச்சியடைந்துள்ளதைப் பார்த்து பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் வெறுப்படைந்துள்ளன. அதனால்தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது” என்றார் பிரசாந்த் பூஷண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT