Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

பவார், திக்விஜய், செல்ஜா உள்ளிட்ட 37 பேர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைக்குப் பல்வேறு மாநிலங்களிலிருந்து 37 வேட்பாளர்கள் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

ஆந்திரத்தில் 6, மேற்கு வங்கத்தில் 5, ஒடிசாவில் 4, அசாமில் 3 இடங்கள் என மீதமுள்ள 18 இடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா, திக்விஜய் சிங், முரளி தேவ்ரா, குமாரி செல்ஜா, ராம்தாஸ் அதாவலே (இந்திய குடியரசுக் கட்சி), விஜய் கோயல் (பாஜக) ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், எஸ்,முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கட்சி), திமுக சார்பில் திருச்சி என்.சிவா ஆகிய 6 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்து மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ள மத்திய அமைச்சர் சரத் பவார், தேவ்ரா உள்ளிட்ட 7 பேர் மகாராஷ்டிரத்திலிருந்து தேர்வாகியுள்ளனர். மஜித் மேமன் (தேசியவாத காங்கிரஸ்), ஹுசைன் தளவாய் (காங்கிரஸ்), ராஜ் முகரம் தூத் (சிவசேனை), சஞ்சய் காகடே (சுயேச்சை), அதாவலே ஆகியோர் தேர்வான மற்றவர்கள்.

ராஜஸ்தானிலிருந்து தில்லி பாஜக தலைவரான கோயல், ராம் நாராயண் துடி, நாராயண் பசாரியா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

பிகாரிலிருந்து ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் 3 பேர், பாஜகவிலிருந்து 2 பேர் தேர்வாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திலிருந்து காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங், பாஜக துணைத் தலைவர் பிரபாத் ஜா, சத்ய நாராயண ஜதியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஹரியாணாவிலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்ஜா, எதிர்க்கட்சியான இந்திய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் ராம் குமார் காஷ்யப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

ஜார்க்கண்டில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), முன்னாள் துணை முதல்வர் காலம் சென்ற சுதிர் மகதோவின் மனைவி சவிதா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

மணிப்பூரிலிருந்து அப்துல் சலாம், மேகாலயத்திலிருந்து தற்போதைய எம்.பி. வான்சுக் சியம், இமாசல பிரதேசத்திலிருந்து விப்லவ் தாக்குர் ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்களும் மாநிலங்களவைக்குத் தேர்வாகினர்.

தெலங்கானா விவகாரத்தில் கொந்தளிப்பு நிலவும் ஆந்திரத்தில் உள்ள 6 இடத்துக்கு காங்கிரஸ் அதிருப்தியாளர் உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 1999க்குப் பிறகு இந்த மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் இப்போதுதான் போட்டி நிலவுகிறது.

2 போட்டி வேட்பாளர்களில் கே.வி.வி.சத்யநாராயண ராஜு வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். ஆனால் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் அதல பிரபாகர் ரெட்டி காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டும் போட்டியிலிருந்து வாபஸ் பெறவில்லை.

அசாமிலிருந்து தேர்வு செய்யப்பட உள்ள 3 இடங்களுக்கு 4 பேர் களத்தில் உள்ளனர். ஒடிசாவில் 4 இடங்களுக்கு 5 பேர் போட்டி போடுகின்றனர். மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கு 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x