Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM
இந்திய எல்பிஜி விநியோகஸ்தர் கூட்டமைப்பு (எல்டிஎப்ஐ) சார்பில் வரும் 19-ம் தேதி முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என அகில இந்திய எல்.பி.ஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.எல்.டி.எப்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எளிதாக்கவேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை எல்பிஜி விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜனவரி 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக இந்திய எல்பிஜி விநியோகஸ்தர் கூட்டமைப்பு (எல்டிஎப்ஐ) கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மற்றொரு முக்கிய அமைப்பான அகில இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (ஏஐஎல்டிஎப்), இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என நாடு முழுவதும் உள்ள தமது உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஜனவரி 8-ம் தேதி அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையில், "சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான வழிகாட்டுதலை எளிதாக்குவது குறித்து அடுத்த வாரம் பெட்ரோலிய அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனவே, எந்தவிதமான வேலை நிறுத்தத்திலும் ஈடுபட வேண்டாம்.
ஒருவேளை யாராவது வேலை நிறுத்தத்தில் ஈடுபட முயன்றால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும்" என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏ.ஐ.எல்.டி.எப். பொதுச்செயலாளர் சந்திர பிரகாஷ் 'தி இந்து'விடம் கூறுகையில், "வேலைநிறுத்தம் அறிவித்துள்ள எல்.டி.எப்.ஐ.க்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகம் உட்பட தென் இந்தியா முழுவதும் அவர்களுக்கு உறுப்பினர்களே இல்லை. எனவே, இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது” என்றார்.
எங்களது கோரிக்கை தொடர்பாக விவாதிக்க, மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் விவேக் ராய் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கும் நிலையில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் சந்திரா தெரிவித்தார்.
சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டரிலிருந்து எரிவாயுவை திருடுவது அதிகமாக நடப்பதால், அதை ‘சீல்’ வைக்கும் முறையை ஒழுங்குபடுத்த வேண்டும், மானியவிலை சிலிண்டர்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதை விநியோகஸ்தர்கள் மூலமாக வாடிக்கையாளரிடம் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் விநியோகஸ்தர்களது முக்கிய கோரிக்கைகளாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT