Published : 10 Dec 2013 09:32 AM
Last Updated : 10 Dec 2013 09:32 AM

பாஜகவுக்கு நிபந்தனை ஆதரவு தர ஆம் ஆத்மி தயார்: பிரசாந்த்

டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க, பிரச்சினையின் அடிப்படையில் ஆம் ஆத்மி ஆதரவு தருவதற்கு பரிசீலிப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக என்.டி.டி.வி. சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "டிசம்பர் 29-ல் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது மற்றும் டெல்லியில் ஜன சபை (பொது இடத்தில் பேரவைக் கூட்டம்) அமைப்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால், பாஜகவுக்கு நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு அளிப்பது குறித்து ஆம் ஆத்மி பரிசீலிக்கக் கூடும்" என்றார்.

மேலும், இது தன்னுடைய சொந்தக் கருத்துதான் என்றும், இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் இன்னும் விவாதிக்கவில்லை என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி நிலைமை குறித்த 'தி இந்து' செய்தியாளர் ஆர்.ஷபிமுன்னாவின் ரிப்போர்ட்:

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த டிசம்பர் 4-ல் நடைபெற்ற டெல்லி தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதில், முதலிடம் பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி 32, புதிய கட்சியான ஆம் ஆத்மி 28, கடந்த மூன்று முறையாக ஆட்சி செய்த காங்கிரஸ் 8, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சைக்கு தலா ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆட்சி அமைக்கத் தேவையான 36 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத் துள்ளபோதிலும், பாஜக ஆட்சி் அமைக்க உரிமை கோரவில்லை.

விலைக்கு வாங்க மாட்டோம்

இது குறித்து, பாஜக டெல்லி மாநில தலைவர் விஜய் கோயல் கூறுகையில், 'எங்களிடம் ஆட்சி அமைக்கத் தேவையான பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க எப்படி உரிமை கோர முடியும்? இதற்காக, பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட மாட்டோம். எதிர்க்கட்சி வரிசையில் அமர ஆட்சேபணை எதுவும் இல்லை' என்றார்.

தேர்தலை சந்திக்கத் தயார்

ஆம் ஆத்மி கட்சியும் இதே முடிவை எடுத்துள்ளது. இது குறித்து, அக்கட்சியின் முக்கிய தலைவரும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வுமான மணீஷ் சிசோதியா கூறுகையில், 'எங்களுக்கு ஆட்சி அமைப்பதற்குத் தேவையான மெஜாரிட்டி இல்லை. வேறு எந்தக் கட்சியிடமும் ஆதரவு கேட்க எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்களும் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம். மீண்டும் தேர்தல் வந்தால் அதைச் சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்றார்.

இந்நிலையில், ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி, எவ்வித நிபந்தனையும் இன்றி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவின்றி ஆம் ஆத்மி கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. இதை நன்கு உணர்ந்த ஷீலா தீட்சித், யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளார். ஆனால், பாஜக இந்த விஷயத்தில் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

டெல்லி தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ள ராம்பீர் கூறுகையில், 'நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன். எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் பாஜகவுக்கு ஆதரவு தரத் தயார்' என நிபந்தனை விதித்தார்.

பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்ட இவரது ஆதரவை வைத்து பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது.

இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரி வாலுடன் கைகோர்க்க பாஜக முன்வர வேண்டும் என கிரண் பேடி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் ஆட்சி அமைய வேறு சில வாய்ப்புகளும் உள்ளன. காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவு தராவிட்டாலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது, இவ்விரு கட்சிகளும் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மறைமுகமாக ஆதரவு கிடைக்கும்.

குடியரசுத் தலைவர் ஆட்சி

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராவிட்டால், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்காக அளிக்கப்படும் ஆறு மாதகால அவகாசத்தில், பாஜக அல்லது காங்கிரசிற்கு ஆம் ஆத்மியுடன் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதேசமயம், விலை கொடுத்து எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் ஆபத்தும் அதிகம் உள்ளது. எனினும், அடுத்த ஆண்டு நாடளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே இதுபோன்ற செயலில் ஈடுபட்டு, தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பாது எனக் கருதப்படுகிறது.

மீண்டும் தேர்தலை சந்தித்து முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கலாம் என பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸ், திடீரென ஆம் ஆத்மிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x