Last Updated : 01 May, 2014 09:49 AM

 

Published : 01 May 2014 09:49 AM
Last Updated : 01 May 2014 09:49 AM

பத்திரிகையாளரை மணக்கிறார் திக்விஜய் சிங்: தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதற்கு கண்டனம்

காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் பத்திரிகையாளர் அம்ருதா ராயை திருமணம் செய்ய இருக்கிறார். அவர்கள் இருவரும் ட்விட்டரில் இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர்.

திக்விஜய் சிங்குக்கு இப்போது 67 வயதாகிறது. அமிருதா ராயின் வயது 40.

காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக அரசியல் கருத்துக்கள் கூறுவதில் பெயர் பெற்றவர் திக்விஜய் சிங். அவருக்கு பிரபல பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் படம் மற்றும் வீடியோவுடன் செய்தி பரவத் தொடங்கியது.

இதனை திக்விஜய் சிங் கடுமையாக மறுத்தார். இதன் பிறகு லேசாக அடங்கிய விவகாரம், மீண்டும் கிளம்பியது. இதற்கு முடிவு கட்டும் வகையில் திக்விஜய்சிங் நேற்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ‘அமிருதா ராயுடன் எனக்கு உறவு இருப்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவரும், அவரது கணவரும் பரஸ்பரம் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர். இது, முடிவானால் எங்களுடைய உறவை நாங்கள் முறைப்படுத்திக் கொள்வோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் அத்துமீறி தலையிடுவதைக் கடுமையாக கண்டிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

இதை உறுதி செய்து அமிருதா ராயும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது கணவரிடம் இருந்து நான் விலகி விட்டேன். நாங்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து தாக்கல் செய்துள்ளோம். இதன் பிறகு நான் திக்விஜய் சிங்கை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லியின் அரசியல் வட்டாரம் கூறுகையில், ‘இப்போது ராஜ்ய சபா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் அமிருதா ராய், இதற்கு முன் என்.டி.டிவியில் பணியாற்றியவர். இவர், ம.பி. முதல்வராக திக்விஜய், இருந்தபோது அவரை சந்திக்க ஒருசிலமுறை தலைநகரான போபாலுக்கு வந்து சென்றார்’ என்று கூறுகின்றனர்.

திக்விஜய்சிங்கின் மனைவி ஆஷா சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் மரணமடைந்தார். திக்விஜய் சிங்குக்கு 4 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் ஜெயவர்தனா சிங் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x