Published : 24 Oct 2014 09:54 AM
Last Updated : 24 Oct 2014 09:54 AM
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்று 2 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு மாவட்டத்தின் ஆர்னியா, சம்பா மாவட்டத்தின் ராம்கர் பகுதிகளில் சர்வதேச எல்லை அருகே அமைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது நேற்று அதிகாலையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ராம்கர், ஆர்னியா செக்டார்களில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக இந்திய ராணுவ வீரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் நமது தரப்பில் பொருள் மற்றும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை” என்றார்.
பலி எண்ணிக்கை உயர்வு
கடந்த 1-ம் தேதி முதல் பலமுறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். கடந்த 6-ம் தேதி ஆர்னியா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ரமேஷ் சந்தர் என்பவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த செவ்வாய்க் கிழமை உயிரிழந்தார். இதையடுத்து பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 95-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள னர். 113 கிராமங்களில் வசித்து வந்த 30 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர்.
50 கிராமங்களில் தீபாவளி இல்லை
வடமாநிலங்களில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாடினர். ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீபங்களை ஏற்ற வேண்டாம் என்று ராணுவம் அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக சமீப காலமாக பாகிஸ்தா னின் தாக்குதல் அதிகளவில் காணப் படும் சம்பா, கதுவா மாவட்டங் களில் உள்ள 50 கிராமங்களில் தீப விளக்குகளை ஏற்ற வேண்டாம் என்று கூறப்பட்டது. இதைய டுத்து, அங்குள்ள மக்கள் தீப விளக்குகளை ஏற்றவில்லை; பட்டாசும் வெடிக்க வில்லை.
தீப விளக்குகளின் ஒளியை பார்த்து, மக்களின் வசிப்பிடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் குறி வைத்துத் தாக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்திய ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்தது.
பாக். ராணுவத்துக்கு இனிப்பு நிறுத்தம்
பஞ்சாப் படைப் பிரிவு பிஎஸ்எப் ஐஜி அசோக் குமார் கூறும்போது, “ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுத்து தீபாவளி இனிப்பு வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
சுதந்திர தினம், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட விசேஷ நாட்களில் இரு நாட்டு ராணுவமும் பரஸ்பரம் இனுப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் முடிந்த பக்ரீத் பண்டிகையின்போது இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் இனிப்பு வழங்காத நிலையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT