Published : 09 Jan 2014 07:25 PM
Last Updated : 09 Jan 2014 07:25 PM

கூகுள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை இணைய தொழில்நுட்ப நிபுணர்களும், அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன.

அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கா ளர் சேவைகளை மேம்படுத்த கூகுளுடன் கைகோக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையத் தின் இணையதளத்தை 6 மாதங்களுக்கு நிர்வகிக்கும் பொறுப்பு கூகுளிடம் ஒப்படைக்கப்பட இருந்தது.

இதுதொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சர்வர்களை பயன்படுத்திக்கொள்ள அண்மையில் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

நிபுணர்கள் எச்சரிக்கை

சுமார் 80 கோடி வாக்காளர்களின் தகவல்களைக் கொண்டுள்ள தேர்தல் ஆணைய இணையதளக் கட்டுப்பாடு கூகுள் கைவசம் மாறினால் தேசப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று தகவல்தொடர்புத் துறை நிபுணர்கள் எச்சரித்தனர்.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான என்.எஸ்.ஏ., இணையதளங்கள் வாயிலாக ஊடுருவி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை வேவு பார்த்ததை அந்த நிபுணர்கள் சுட்டிக் காட்டினர். இந்தியாவில் மட்டும் ஒரு மாதத்தில் 1350 கோடி தகவல்களை என்.எஸ்.ஏ. திருடியது என்று அதன் முன்னாள் ஊழியர் டேவிட் ஸ்னோடென் ஆதாரங்களுடன் வெளியிட்டதையும் நிபுணர்கள் நினைவுபடுத்தினர்.

காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு

இதைத் தொடர்ந்து கூகுள் ஒப்பந்தம் தொடர்பாக அனைத் துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கூகுளுடன் கைகோக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

தேர்தல் ஆணையக் கூட்டம்

இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தலைமையில் டெல்லியில் வியாழக்கிழமை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ. ஜைதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் திட்டத்தைக் கைவிட ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x