Published : 18 Jan 2014 03:46 PM
Last Updated : 18 Jan 2014 03:46 PM

காஷ்மீருக்கு உதவுமானால் 370-வது பிரிவை எதிர்க்க மாட்டோம்: ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுமானால், அந்த சட்டப்பிரிவை தொடர்ந்து பேணுவதில் பாஜகவுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

இருப்பினும் 370-வது சட்டப்பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்வதைத் தடுக்குமானால் அதனை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை பாஜக தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், ராஜ்நாத் சிங்கின் இப்பேச்சு பெரும் கவனத்துக்குரியதாக அமைந்துள்ளது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது. கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

மத்தியில் பா.ஜ.க. தலைமையில் வலுவான அரசு அமைந்து விட்டால், குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்பட்டதைப் போல, காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என காங்கிரஸ் கட்சி அச்சப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் அரசியலை நடத்தி வருகிறது. மோடி தலைமையில் ஆட்சி அமைவது பேரழிவை ஏற்படுத்தும் என்று மன்மோகன்சிங் கூறினார். ஆனால், மோடி குஜராத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றியிருக்கிறார்.

முஸ்லிம்கள்தான் இந்தியா வின் வளங்களில் முதல்உரிமை உள்ளவர்கள் என்று பேசியது மன்மோகன்சிங்தான். இதனை சோனியா நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ்தான் உண்மையிலேயே மதவாதக் கட்சி. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ‘இந்து பயங்கரவாதம்’ என்று கூறியதே இதற்குச் சாட்சி.

லோக்பால் மசோதா ராகுல் காந்தியால்தான் வந்தது என்று காங்கிரஸ் கூறுவதை ஏற்க முடி யாது. அது அண்ணா ஹசாரே எடுத்த முயற்சிகளாலும், பா.ஜ.க. தலைவர்கள் கொடுத்த அழுத்தத் தினாலும் வந்தது. நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் மோடியை நிரபராதி என்று கூறிய பிறகும், காங்கிரஸ் அவர்மீது மதவெறி முத்திரையை குத்துகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அரசியல், பொருளாதார நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இவற்றில் இருந்து நாட்டை மீட்பதற்கு பா.ஜ.க.வால் மட்டுமே முடியும். 1977ம் ஆண்டில் இருந்து காங்கிரஸுக்கு வலிமையான மாற்றாக பா.ஜ.க. ஒன்றுதான் இருந்துவருகிறது. இந்த உண்மையை பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றார் அவர்.

370-வது பிரிவு

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டம் 370-வது பிரிவை நீக்க வேண்டும் என இதுவரை இருந்த பாஜகவின் கருத்தில் லேசான மாற்றம் செய்து பேசினார் ராஜ்நாத்சிங். 370- வது பிரிவு உண்மையிலேயே அம்மாநிலத்தின் வளர்ச் சிக்கு உதவினால் தங்களுக்கு அதில் ஆட்சேபம் இல்லை என்றும், இருப்பினும் அந்தப் பிரிவு காஷ்மீரை, தேசிய நீரோட்டத்தில் சேரவிடாமல் தடுக்க செய்யப்பட்டுள்ள சதி என்றும் ராஜ்நாத் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x