Published : 23 Sep 2016 07:49 AM
Last Updated : 23 Sep 2016 07:49 AM
‘‘காவிரி நீர் திறந்துவிடும் விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலை முழுக்க முழுக்க சட்ட விரோதம். உச்ச நீதிமன்றம் நினைத்தால், போலீஸ் மற்றும் ராணுவத்தை நிறுத்தி உத்தரவை அமல்படுத்த முடியும்’’ என்று முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீரை 27-ம் தேதி வரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அனைத்துக் கட்சி கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்து விட்டார். தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை ஒரு மாநில அரசு அமல்படுத்த முடியாது என்று அறிவித்திருப்பதன் மூலம், அரசியல் சாசன சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்ட வல்லு னர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கூறும்போது,‘‘கர்நாடக அரசு தாங்களாகவே ஒரு அரசியல் சாசன ரீதியான சிக்கலை உருவாக்கி உள்ளனர். அவர்களது நிலை முழுக்க முழுக்க சட்ட விரோதமானது. சட்டப்பேரவை தீர்மானம் எதுவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியும். நாடாளுமன்றம் நினைத்தாலும் ரத்து செய்ய முடியும். நீதிமன்ற அவமதிப்பு நடைமுறையை தொடர முடியாது என்று கர்நாடக அரசு கருதுகிறது. அது தவறு. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுக்க முடியும்’’ என்றார்.
மாநில அரசை கலைக்கும் 356-வது பிரிவு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு, ‘‘உச்ச நீதிமன்றம் நினைத்தால், மத்திய அரசின் மூலம் போலீஸ் மற்றும் ராணுவத்தின் அதிகாரத்தையே நேரடியாக பயன்படுத்த முடியும். ராணுவத்தையும் போலீஸையும் நிறுத்தி, நேரடியாக உச்ச நீதிமன்றமே காவிரி நீரை திறந்துவிட முடியும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT