Published : 30 Mar 2014 12:33 AM Last Updated : 30 Mar 2014 12:33 AM
பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்
மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக, பாஜக சனிக்கிழமை இரவு அறிவித்தது.
ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவதன் காரணமாக, அவரை நீக்குவது என கட்சியின் தலைமை முடிவு எடுத்தது.
இதேபோல், ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுபாஷ் மஹாரியாவையும் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து, பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.
பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்படுவது, இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்ததற்காக, 2009-ல் ஜஸ்வந்த் சிங்கை பாஜக நீக்கியது நினைவுகூரத்தக்கது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானின் பார்மரை சேர்ந்தவர். இப்போது மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி எம்.பி.யாக அவர் உள்ளார். மக்களவைத் தேர்தலில் பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பளிக்க பாஜக மறுத்து விட்டது. எனவே, அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு, பாஜக கேட்டுக்கொண்டது. எனினும், கட்சியின் அறிவுறுத்தலை ஜஸ்வந்த் சிங் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், கட்சியின் நடவடிக்கைக்கு அவர் ஆளானார்.
பாகிஸ்தான் எல்லை அருகே இருக்கும் பார்மரில் சுமார் 16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நம் நாட்டின் பெரிய தொகுதிகளில் ஒன்றான இங்கு ஏப்ரல் 17-ல் தேர்தல் நடைபெறவுள்ளது.
இங்கு பாஜக சார்பில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் ஆதரவு பெற்ற சோனேராம் சவுத்ரி போட்டியிடுகிறார். இவர், பார்மர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT