Published : 06 Oct 2014 04:23 PM
Last Updated : 06 Oct 2014 04:23 PM
பிரதமர் நரேந்திர மோடி குறித்து புகழ்ந்து பேசுவதை நிறுத்துமாறு காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ஸ்வச் பாரத்' என்ற திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உட்பட பலதரப்பு பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை ஏற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பிரதமர் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமரின் 'தூய்மை இந்தியா' பிரச்சாரத்தில் இணைவதை பெருமையாக கருதுகிறேன். தற்போது நான் சில பணிகளுக்காக வெளிநாடு வந்துள்ளேன். இந்தியா திரும்பியவுடன், ஏற்ற உறுதிமொழியை செயல்படுத்துவேன்" என பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹுசேன், "சசி தரூர் மோடியை புகழ்ந்து கொண்டு இருக்கிறார். அக்டோபர் 2-ஆம் தேதி துவங்கப்பட்ட திட்டம் குறித்து அல்லாமல், சில காலமாகவே சசி தரூர் மோடியை புகழ்ந்து கொண்டு தான் வருகிறார்.
ஆனால் மோடியை புகழ்ந்து பேச அப்படி என்ன இருக்கிறது என்பது தான் எங்கள் அனைவருக்கும் விளங்காமலே உள்ளது. மோடி புகழ்ச்சியை சசி தரூர் நிறுத்த வேண்டும்" என்றார்.
சசி தரூரின் இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் மேலிடத்திடம் ஆலோசனை நடத்த கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டு வரும் நிலையில், ஹுசேனின் இந்தப் பேச்சு சசி தரூருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக இருக்கலாம் என்ற நிலையில் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT