Published : 10 Mar 2015 06:24 PM
Last Updated : 10 Mar 2015 06:24 PM
ஸ்ரீநகர் - ஹப்பகதல் பகுதியில் மஸரத் ஆலம் இல்லம் உள்ள தெருவில் முந்தைய நாளின் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதற்கான ஒரு சுவடும் இருக்கவில்லை.
அந்தத் தெருவில் நூற்றுக்கணக்கானோர் மஸரத் ஆலம் இல்லத்துக்கு வருகை தந்து, அவரது விடுதலைக்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
சுமார் நான்கரை ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் விடுதலையாகி வீடு திரும்பியுள்ள மஸரத் ஆலம் தனது இல்லத்தில் நூற்றுக்கணக்கானோரைச் சந்தித்துக் கொண்டிருந்தார். நண்பர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என்று அனைவரும் குழுமியிருந்தனர்.
சிறையிலிருந்து வந்த பிறகு வழக்கமான அரசியல் பணிக்குத் திரும்புவது பற்றியும், குறிப்பாக ‘எதிர் அரசியல்’ பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழிடம் அவர் கூறும் போது, “ஒருவிதத்தில் கடவுளின் அருளும் பரிசும்தான் இது. என் விடுதலை நாடாளுமன்றத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஆனால், அனைத்தையும் விட முக்கியமானது என்னவெனில், அடித்தளத்தில் மவுனம் என்பது எவ்வளவு நுண்ணிய ஒரு விஷயம். ஆனால் அதன் மேல்தான் அமைதி என்ற ஒன்று சித்தரிக்கப்படுகிறது.
எங்களது கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் மீது இந்தியாவும் இந்திய ஆதரவாளர்களும் எப்படி அஞ்சுகிறார்கள் என்பதையும் இந்த சர்ச்சைகள் எடுத்துரைக்கிறது” என்றார்.
காஷ்மீர் மாநில தேர்தலுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தது பற்றிய கேள்விக்கு அவர் கூறும் போது, “காஷ்மீர் மக்கள் விடுதலை இயக்கங்கள் பக்கம் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. அடக்குமுறைச் சூழலில் சில பல தினசரி வற்புறுத்தல்களினால் அவர்கள் வாக்களித்துள்ளனர்.
எதிர்ப்பு அரசியல் செயல்பாட்டாளர்களை சிறையில் அடைத்தும், வீட்டுக்காவலில் வைத்தும் இதன் மூலம் மக்களிடத்தில் அவர்கள் சென்று தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியாத வண்ணம் அரசு செயல்பட்டால் அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தில், கருத்துகளுக்கு இடையிலான போரில் செயல்பாட்டாளர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும்? ஏனெனில் இது ஜனநாயகம் அல்ல, இங்கு ஜனநாயகம் இல்லை” என்றார்.
ஆனால் நீண்ட நாளைய சிறைவாசத்துக்குப் பிறகு தனது சொந்தக் கருத்துகளை, அரசியலை விடுத்து தெஹ்ரீக் ஹுரியத் கட்சியின் திட்டங்களில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.
அறிவியல் பட்டப்படிப்பை முடித்துள்ள 44 வயது மஸரத் ஆலம் தனது தொடக்க கால கல்வியை கிறித்துவ மிஷனரி பள்ளியில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு மஸரத் ஆலம் பிரிவினைவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரேமண்ட் துணிகளை விற்று வந்தது இவரது குடும்பம். நல்ல செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் மஸரத். ஆனால், சேர்த்த பணம், தற்போது இல்லை.
இது குறித்து மஸரத் ஆலமின் மாமா பரூக் அகமது கூறும் போது, “ஆலம் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த பிறகே கடினமான அந்தப் பாதையை எங்கள் குடும்பத்தினரும் தேர்ந்தெடுத்தனர். மெதுவாக எங்களிடம் இருந்த செல்வம் குறைய ஆரம்பித்தது. அனைத்தையும் இழந்தோம், ஆனாலும் இப்போது மரியாதைக்குரிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT