Published : 16 Mar 2017 10:06 AM
Last Updated : 16 Mar 2017 10:06 AM

ஆந்திர சட்டப்பேரவையில் ரூ.1.56 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாகி வரும் அமராவதியில் உள்ள வெலகபுடி பகுதியில் புதிய சட்டப்பேரவை அமைந்துள்ளது. இங்கு முதன் முறையாக 2017-18 நிதியாண்டுக் கான பட்ஜெட்டை நிதியமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு நேற்று தாக்கல் செய்தார்.

ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 999 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

உள்துறைக்கு ரூ.5,221 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சாலை மற்றும் கட்டிடத் துறை வளர்ச்சிக்கு ரூ.4,041 கோடி, அமராவதி பகுதி வளர்ச்சிக்கு ரூ.1,061 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்க ரூ.1,600 கோடி, என்.டி.ஆர் உணவகத்துக்கு ரூ.200 கோடி, என்.டி.ஆர் மருத்துவ சேவைக்கு ரூ.1,000 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ.3,600 கோடி விவசாய வங்கி கடன் ரத்து செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் மாநிலத்தில் உள்ள வேலையில்லா 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று விவசாய பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. இதனை மாநில விவசாய துறை அமைச்சர் புல்லாராவ் தாக்கல் செய்தார்.

பெண் தற்கொலை முயற்சி

அமராவதி சட்டப்பேரவை வளாகத்துக்குள் நின்றிருந்த காகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான கல்யாணி என்பவர் திடீரென தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மங்களகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x