Published : 18 Nov 2013 03:35 PM
Last Updated : 18 Nov 2013 03:35 PM
இணையத்தில் 'சைல்ட் போர்னோ' எனப்படும் சிறார் பாலியல் வக்கிர வீடியோக்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆபாசத் தளங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை, மூன்று வாரங்களுக்குள் விளக்கமாக அளிக்க வேண்டும் என தொலைதொடர்பு துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
மேலும், இணையத்தில் சிறார் பாலியல் வக்கிர வீடியோக்கள் உள்ளிட்ட ஆபாசத் தளங்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இணையத்தில் உள்ள பாலியல் வக்கிர வீடியோக்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக சிறார் பாலியல் வக்கிர வீடியோக்கள் தடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸும் அனுப்பியிருந்தது.
அதற்கு, சர்வதேச ஆபாச தளங்களை முடக்குவது மிகவும் கடினமான காரியம் என்றும், அதுகுறித்து பல்வேறு துறைகளுடன் ஆலோசித்துத் தீர்வு காண கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தர்ப்பில் ஆஜரான கே.வி.விஸ்வநாதன், இவ்விவகாரத்தில் விளக்கம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் செய்ய வேண்டும் என்றார். ஆனால், அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். உடனடியாக விளக்கமளிக்குமாறும் வலியுறுத்தினார்.
சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பிரச்சினையை மிகவும் முக்கியமானதாகக் கருதி, மூன்று வாரங்களில் விளக்கம் தர வேண்டும் என்றும், அதில் உரிய தீர்வுகள் இடம்பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வஸ்வானி என்ற வழக்கறிஞர் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பது குற்றம் அல்ல என்றாலும்கூட, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தூண்டுவதால், இணையத்தில் உள்ள போர்னோ தளங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்ட 20 கோடி போர்னோ வீடியோக்களும் கிளிப்களும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதாகவும், இணையதள சட்டங்கள் கடுமையாக இல்லாதததே இதற்குக் காரணம் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT