Published : 07 Jun 2017 09:55 AM
Last Updated : 07 Jun 2017 09:55 AM
ஹைதராபாத்தில் செஞ்சல்கூடா சிறைச்சாலை உள்ளது. இங்கு, ஆந்திரா, தெலங்கானா மாநில கைதிகள் மட்டுமல்லாது பல வெளி நாட்டு கைதிகளும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த சிறைச்சாலை சார்பில் ஒரு பெட்ரோல் பங்க் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் 45 ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் சிறிய தவறுகள் செய்து தண்டனை அனுபவித்து வரும் 16 கைதிகள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணி செய்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் கைதிகளுக்கு மாதம் ரூ.12,000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்த சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சைதய்யா கூறியதாவது:
எங்கள் சிறைச்சாலை சார்பில் ஐஓசிஎல் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதில் ஆயுள் கைதிகள் பணிபுரிகின்றனர். ஆயுள் கைதியின் நடவடிக்கை, குடும்ப பின்னணி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பணி நியமனம் குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் குழு முடிவு செய்கிறது.
கைதிகளால் நடத்தப்பட்டு வரும் இந்த பெட்ரோல் பங்க் லாபகரமாக இயங்கி வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி முதல் 120 கோடி வரை டர்ன் ஓவர் செய்யப்படுகிறது. தினமும் 28,000 முதல் 30,000 லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி லாபம் கிடைக்கிறது. மேலும் நாட்டிலேயே அதிக லாபம் ஈட்டித்தரும் பெட்ரோல் பங்குகள் பட்டியலில் இது 8-வது இடம் வகிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT