Published : 25 Jan 2017 07:57 AM
Last Updated : 25 Jan 2017 07:57 AM
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடற்கரையில் மாணவர்களும் இளைஞர்களும் நாளை நடத்த திட்டமிட்டிருந்த மவுனப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் கூறினார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆந்திராவில், மாநில சிறப்பு அந்தஸ்து கோரி மாணவர்களும் இளைஞர்களும் நாளை (ஜனவரி 26) முதல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அனைவரும் விசாகப்பட்டினம் ஆர்.கே.கடற்கரைக்கு திரண்டு வருமாறு சமூக வலைதளங்களில் இவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
144 தடை உத்தரவு
இந்நிலையில் ஆந்திர மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் நேற்று மாலை விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை சிலர் இங்கும் பின்பற்ற முயற்சிக்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் மக்களைத் திரட்ட முயற்சிக்கின்றனர். தலைமை இல்லாத இந்தப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்க இயலாது. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் சமூக விரோத சக்திகள் புகுந்ததால் கலவரம் ஏற்பட்டது. இதேபோன்று ஆந்திராவிலும் ஏற்படும் என்பதால் போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.
போராட்டத்துக்கு யார் தலைமை ஏற்கிறார்கள், இதில் எவ்வளவு பேர் கலந்துகொள்கின்றனர் என்பதை தெரிவித்தால் மட்டுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியும். ஆதலால் 25-ம் தேதி இரவு முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT