Published : 03 Sep 2016 10:30 AM
Last Updated : 03 Sep 2016 10:30 AM

பக்தர்கள் காணிக்கை செலுத்தும் போது நெரிசலைத் தவிர்க்க ஏழுமலையான் கோயிலில் கூடுதல் உண்டியல்

திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்த பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், கோயில் வளாகத்தில் கூடுதல் உண்டியல் அமைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள அன்ன மய்யா பவனில் நேற்று தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமையில் தொலைபேசி மூலம் பக்தர்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்களின் நிறை குறைகளை கேட்டறிந்த தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் கூறும் போது, “பல கோயில்களுக்கு இந்து தர்ம பிரச்சாரம் சார்பில் மராமத்து பணிகளை செய்ய ஆலோசனை நடத்தப்படும். திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவ மனையில் வசதிகள் அதிகரிக்கப் படும். வாரி மெட்டு பகுதியில் முதியோர், குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. பக்தர்களின் ஆலோசனைப்படி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு கூடுதலாக சடாரி, தீர்த்த மையம் அமைக்க ஆலோசனை நடத்தப்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உண்டியலில் காணிக்கை செலுத்த கூட்ட நெரிசல் ஏற்படுவதாக பக்தர்கள் குறை கூறி உள்ளனர். இதனை தவிர்க்க தேவைப்படும் இடங்களில் கூடுதல் உண்டியல்கள் அமைக்கப்படும்” என்றார்.

ஆன்லைன் டிக்கெட்

அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான 1.5 லட்சம் சேவை டிக்கெட் விநியோ கத்தை ஆன்லைனில் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி யுள்ளது.

பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இத்திட்டத்துக்கு பக்தர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதன் காரணமாக தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளையும் ஆன்லைன் மூலம் விநியோகித்து வருகிறது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான 1,05,711 டிக்கெட்டுகள் விநியோகம் நேற்று ஆன்லைனில் தொடங்கப் பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை விஐபி பிரேக் சமயத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா சுவாமி தரிசனம் செய்தார். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரும் சுவாமி தரிசனம் செய்தனர். அமைச்சர் மற்றும் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x