Published : 27 Jul 2016 05:40 PM
Last Updated : 27 Jul 2016 05:40 PM

உத்தராகண்ட் மாநிலத்தில் சீனா ஆக்கிரமிப்பு: உறுதி செய்தார் முதல்வர் ஹரிஷ் ராவத்

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சீன துருப்புகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் உறுதி செய்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டமான கமெங் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுத்தின் 250 வீரர்கள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் அணு விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராக முயற்சி மேற்கொண்ட சமயத்திலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அருணாச்சலில் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பில் சீனா ஈடுபட்டது.

இந்த சூழலில் சீனத் துருப்புகள் உத்தராகண்ட் மாநில எல்லைக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கடந்த 19-ம் தேதி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் இன்று உறுதி செய்தார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘சமோலி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் நுழைந்து ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். நல்லவேளையாக அங்குள்ள முக்கிய கால்வாயை அவர்கள் தொடவில்லை. இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அதன்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை கவலையளிக்கும் விஷயமாகும். நமது எல்லையில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும். எனவே எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்கும்படி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

இது பற்றி கேள்வி எழுப்பிய போது பாஜக பிஹார் எம்.பி. ஆர்.கே.சிங், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய போது, “உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக்கோடு தீர்மானிக்கப்படவில்லை. நாம் தீர்மானிக்க விரும்புகிறோம், சீனா ஒத்துழைக்க மறுக்கிறது” என்றார்.

அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் சீன எல்லையொட்டி அமைந்துள்ளன. இதில் உத்தராகண்ட் 350 கி.மீ தொலைவுக்கு சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x