Published : 08 Jul 2016 10:10 AM
Last Updated : 08 Jul 2016 10:10 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் யானை முடியை தேவஸ்தான ஊழியர்கள் ரூ.1,000-க்கு ரகசியமாக விற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதனை ஏலம் விடுவதின் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் கோயில் சேவையில் ஈடுபட்டு வரும் யானையின் வாலில் உள்ள முடியையும் தேவஸ்தான ஊழியர்கள் விற்று பணம் சம்பாதித்து வருவதாகவும் ஒரு முடி ரூ.1000-க்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை, மாலை இரு வேளைகளிலும் கோயில் முன்பு 2 யானைகள் நிறுத்தப்பட்டு சுவாமி சேவையில் பங்கேற்று வருகின்றன. மேலும், பிரம்மோற்சவம் போன்ற விழாக்களில் வாகன சேவையின் முன்பு குதிரை, யானை, காளை போன்ற பரிவட்டங்களும் செல்வது ஐதீகம். இவை திருமலையில் உள்ள கோ சாலையில் உள்ளன.
இவைகளை பராமரிக்க தேவஸ்தான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், யானைகளின் வாலில் உள்ள முடிகளை மோதிரமாக செய்து அணிந்து கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள், ரகசியமாக ஒரு முடிக்கு ரூ. 1,000 பெற்று கொண்டு விற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்போது உள்ள யானைகளின் வாலில் முடி இல்லாமல் உள்ளது.
மேலும் இந்த யானைகளின் கால்களும் காயமடைந்து காணப்படுகின்றன. கண்களிலும் தொடர்ந்து நீர் வடிந்து கொண்டே உள்ளது. இவைகளை கவனிக்காமல், யானையின் வால் முடியை விற்று காசாக்குவதிலேயே ஊழியர்கள் குறியாக உள்ளனர்.
தேவஸ்தான அதிகாரிகளும் இந்த அவலத்தை கண்டும் காணாமல் உள்ளதால், ஊழியர்கள் யானையின் வால் முடியை ஆயிரக்கணக்கில் விற்கும் அவலம் தொடர்கிறது. இது குறித்து வன சட்டத்தின்படி ஊழியர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென சில சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் கோ சாலையின் இயக்குநர் டாக்டர் ஹரிநாத் ரெட்டி ‘தி இந்து’ விடம் கூறியது: சுவாமியின் சேவையில் ஈடுபட்டு வரும் 2 யானைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு 4 ஊழியர்களிடம் விடப்பட்டுள்ளது. இதில் இருவர், யானையின் வால் முடிகளை விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT