Published : 11 Feb 2014 12:22 PM
Last Updated : 11 Feb 2014 12:22 PM
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீது சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. ஐ.ஓ.ஏ பொதுக்குழு கூட்டத்தின்போது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளுக்கான ஐஓசி இயக்குநர் பியர் மிரோ, ஐஓசி நீதி நெறிக்குழு உறுப்பினர் பிரான்சிஸ்கோ ஜெ.எலிஸால்டி, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இயக்குநர் ஜெனரல் ஹுசைன் அல் முஸ்லாம் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெற்றது.
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் விதிமுறைப்படி தேர்தல் நடைபெற்றதால், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான நிர்வாகிகள் தேர்தலில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தலில் அரசின் குறுக்கீடு இருந்ததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்தது. இதனையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்து ஐ.ஓ.சி. உத்தரவிட்டது.
இதனால், அண்மையில் ரஷ்யாவில் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சர்வதேச ஒலிம்பிக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை இன்று நீக்கப்பட்டுள்ளதால், சர்வதேச ஒலிம்பிக் கழக உறுப்பினர் பட்டியலில் இந்தியா மீண்டும் இணைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT