Published : 14 Jul 2016 10:41 AM
Last Updated : 14 Jul 2016 10:41 AM
சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மேல்முறை யீட்டு நீதிமன்றங்கள் அமைக்க கோரும் வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மேல்முறை யீட்டு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவு களுக்கு எதிராக தொடரப்படும் மேல் முறையீட்டு வழக்குகளை இந்த நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் பணிப்பளு குறையும் என்று கூறி, வழக்கறிஞர் வசந்தகுமார் கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன்மீது, மத்திய அரசு 6 மாதங் களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி அப்போது உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. வழக்கறிஞர் வசந்த குமார் தொடர்ந்த மனுவின் மீது விசாரணை நடத்திய மத்திய அரசு அந்த கோரிக்கையை நிராகரித்தது.
இதை எதிர்த்து வசந்தகுமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மேல்முறையீட்டு நீதி மன்றங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட் டிருந்தது. இந்த வழக்கில் நீதி மன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணு கோபால் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் நியமிக்கப் பட்டிருந்தனர். மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைப்பதை கே.கே.வேணுகாபால் ஆதரித்து வாதிட்டார். இதன்மூலம், பொது மக்களின் வழக்குச் செலவு குறை யும். அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார்.
வழக்கறிஞர்களுக்கே உதவும்
ஆனால், மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைப்பது சாத்திய மல்ல; விரும்பத்தக்கதும் அல்ல. இத்தகைய நீதிமன்றங்களை அமைப்பது ஒரு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாக அமைந்துவிடும்.
மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்றால், அரசியல் சாசன ஷரத்து 130-ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். இது, உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட சட்டத்தையே மாற்றும் வகையில் அமைந்துவிடும். எனவே, இது சாத்தியமல்ல. மேலும், இதுபோன்ற நீதிமன்றங்கள் அமைப் பது வழக்கறிஞர்கள் சம்பாதிப் பதற்கே உதவும்’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை பரிசீலித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ஆர்.பானுமதி மற்றும் யு.யு.லலித் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘இந்த வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளதால், அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப் படுகிறது’என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT