Published : 04 Jun 2017 09:58 AM
Last Updated : 04 Jun 2017 09:58 AM

தங்கும் அறைகளை முன்கூட்டியே காலி செய்தால் 25 முதல் 50% பணம் திருப்பி தர திருப்பதி தேவஸ்தானம் முடிவு: பக்தர்கள் வரவேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் முன் கூட்டியே தங்கும் அறைகளை காலி செய்தால் அவர்கள் செலுத்திய பணத்தை 25 முதல் 50 சதவீதம் வரை திருப்பித் தர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வர முடியாமல் போனால் அவர் களுடைய பணத்தையும் திருப்பித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் சிலர் மட்டுமே தங்கும் அறைகளை முன்பதிவு செய்கின்றனர். பலர் நேரடியாக திருமலைக்கு வந்த பின்னர் அறை எடுத்து தங்குகின்றனர். திருமலையில் மட்டும் 7,000 தங்கும் அறைகள் உள்ளன. இதில் ரூ.50 முதல் ரூ.7,500 வரை ஒரு நாளைக்கு வாடகை வசூல் செய்யப்படுகிறது. இதில் சாமானிய பக்தர்கள் தங்கும் அறை கள் வெறும் 4,500 மட்டுமே உள்ளன. இவை ரூ.50 முதல் ரூ.1,500 வரை உள்ளன. இவை பெரும்பாலும் அதிக கூட்டமுள்ள நாட்களில் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் கோடை விடுமுறை மற்றும் பிரம்மோற்சவம் போன்ற விசேஷ நாட்களில் சாமானிய பக்தர்கள் தங்கும் அறைகள் கிடைக் காமல் பிளாட்பாரங்களிலும், கோயிலுக்கு வெளியிலும் இரவில் தூங்குகின்றனர்.

இதனிடையே முன்னாள் தேவஸ்தான தலைமை அதிகாரி சாம்பசிவ ராவ் இருந்தபோது திருமலையில் சாமானிய பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. இதனிடையே புதிய தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் பதவியேற்றார். இவர் தற்போது தங்கும் அறைகள் குறித்து சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அதாவது, தங்கும் அறைகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலுக்கு வர இயலாமல் போகும் பக்தர்கள், அல்லது தங்க ளது வருகையை தள்ளிப்போடும் பக்தர்களுக்கு அவர்கள் முன்பதிவு செய்த பணத்தை அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கு முன் அந்தப் பணம் திருப்பி அனுப்பப்பட்ட தில்லை. மேலும், தங்கும் அறைகள் எடுத்து தங்குவோர் 12 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 50 சதவீதமும், 6 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 25 சதவீதமும் பணம் திருப்பி தரப்படுமென அறிவித்துள்ளார். இதனால் பக்தர்களுக்கு தங்கும் அறை எடுத்த பணம் அவர்கள் தங்கி இருந்த நேரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்திட்டத் துக்கு பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் அறை களுக்கு டெபாசிட் செலுத்தும் திட்டம் ஏற்கனவே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x