Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநாட்டை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. டெல்லியில் வரும் 10-ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டில் பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல், வரும் மே மாதம் நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிக்கை, மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து உத்தரவுகளை அனுப்பி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஏற்பாட்டில், அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில், அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதன்தொடர்ச்சியாக, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டுக்கும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வரும் 10-ம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த மாநாடு நடக்க உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான நடவடிக்கைகள், தேர்தலில் பண விநியோகத்தைத் தடுப்பது, சமூக வலைதளங்களில் கட்சிகளின் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணி தொடங்கியபோது, அது தொடர்பாக விவாதிக்க மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கூட்டத்தை ஆணையம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT