Published : 01 Apr 2017 02:24 PM
Last Updated : 01 Apr 2017 02:24 PM

கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை புகார்: ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஷெல் நிறுவனக் கிளைகளில் அமலாக்கத் துறையினர் இன்று (சனிக்கிழமை) அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிறுவனங்களின் வாயிலாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடத்தப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஷெல் மையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஷெல் நிறுவனங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட மோசடிகள் நடைபெறுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் டெல்லியில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 16 மாநிலங்களில் உள்ள ஷெல் நிறுவனக் கிளைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

செயலாக்கக் குழு:

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் வருவாய் துறை செயலர், கார்ப்பரேட் விவகாரத்துறை செயலர் கூட்டு தலைமையின் கீழ் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஷெல் நிறுவனங்களின் மீதான புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்..

கடந்த 2016 நவம்பரில் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஷெல் நிறுவனங்கள் ரூ.1,238 கோடி அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் ரூ.3900 கோடி கறுப்புப் பணம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் மூலம் சலவை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x