Published : 21 Oct 2014 04:13 PM
Last Updated : 21 Oct 2014 04:13 PM
காஷ்மீரில் ஐ.எஸ். கொடியுடன் சென்ற இளைஞர்களுக்கும், அந்த இயக்கத்தும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னர் பக்ரித் தொழுகையை முடித்து சில இளைஞர்கள் பேரணியாக ஐ.எஸ். அமைப்பின் கொடியுடன் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவை என்றும், இதனை சாதாரண செயலாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்மீரில் ஐ.எஸ். கொடியுடன் சுற்றிய இளைஞர்களை மாநில காவல்துறை விசாரணை நடத்தியது. இதில் காஷ்மீரில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய இளைஞர்கள் பயங்கரவாத பின்னணி கொண்டவர்கள் இல்லை என்றும், அவர்களுக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், எதற்காக அவர்கள் ஐ.எஸ். கொடியுடன் சென்றனர் என்பது குறித்த விவரம் விசாரணையின் முடிவில் தெரியும்" என்றார்.
முன்னதாக, அந்த மாநிலத்தில் ஐ.எஸ். கொடியுடன் சென்றது குறித்து கருத்து தெரிவித்த ஒமர், அது முட்டாள்களின் செயலாக இருக்கலாம் என்று கூறியிருந்ததை அடுத்து, அவர் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு மாநிலத்தின் பிரச்சினையில் பொறுப்பான பதில் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT