Published : 25 Feb 2014 09:30 AM
Last Updated : 25 Feb 2014 09:30 AM
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கான முதல் இணையதள திருமண தகவல் மையத்தை தொடங்க கேரள இளைஞர் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கும்பநாடு பகுதியிலுள்ள புனித மேரி ஆர்தடக்ஸ் பாரிஸ் தேவாலயத்தின் கீழ் இயங்கும் புனித ஜார்ஜ் ஆர்தடக்ஸ் இளைஞர் அமைப்பு இந்த இணையதளத்தைத் தொடங்கவுள்ளது.
www.insightmatrimony.com என்ற இந்த இணையதளத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள், தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யலாம். வரும் மார்ச் 9-ம் தேதி இந்த இணையதளம் தொடங்கப் படவுள்ளது.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப் பாளர் நிதின் சாக்கோ தாமஸ் கூறுகையில், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒருவித இடைவெளியுடனேயே நம் சமூகம் அணுகுகிறது. புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினாலும் அவர்களை நோயாளியாகவே பார்க்கின்றனர். இந்த மனப்பாங்கு காரணமாக அவர்களுக்கு திருமண வாய்ப்பு மறுக்கப்பட்டு, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பமுடிவதில்லை. ஆகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித் திருப்பர்.
ஆக, இதேபோன்ற பிரச்சினை யைச் சந்தித்த மற்றொரு குடும்பம், இப்பிரச்சினைகளை நன்கு புரிந்து கொள்ளும். ஆக, அந்தக் குடும்பத்தினர் மணவாழ்க்கை மூலம் இணைவதற்கு இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும். புற்றுநோயிலிருந்து மீண்ட 25 வயது முதல் 35 வயது வரையிலானவர்கள் இந்த இணையதளத்தில் இலவசமாகப் பதிந்து கொள்ளலாம். கேரள காவல்துறை கூடுதல் தலைவர் கே.பத்மகுமார் இந்த இணையதளத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார்” என்றார்.
புற்றுநோய் தொடர்பான இதர நிகழ்ச்சிகளையும் நடத்த இந்த இளைஞர் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT