Published : 22 Oct 2014 09:32 AM
Last Updated : 22 Oct 2014 09:32 AM

‘ஹுத் ஹுத்’ புயலுக்கு 2.38 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்: ஆந்திர அரசு அறிவிப்பு

கடலோர ஆந்திரத்தை புரட்டிப் போட்ட ‘ஹுத் ஹுத்’ புயலுக்கு இதுவரை 46 பேர் பலியானதாகவும் 2,37,854 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமடைந்துள்ளதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

கடந்த 12-ம் தேதி கடலோர ஆந்திர மாநிலத்தை ‘ஹுத் ஹுத்’ புயல் பயங்கரமாக தாக்கியது. இதனால் விஜய நகரம், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புயலால் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

புயல் நிவாரண நிதிகளை நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் புயலுக்கு இதுவரை 46 பேர் பலியானதாக ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 41,269 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

நெல், கரும்பு, பருத்தி, மிளகாய் போன்ற பயிர்கள் 2,37,854 ஹெக்டேர் பரப்பளவில் சேதமடைந்துள்ளது. காய்கறி, பழத்தோட்டங்கள் 72,035 ஹெக்டேர் நாசமடைந்துள்ளது. 219 இடங்களில் தண்டவாளங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன. 2,250 கி.மீ. சாலைகள், 455 கட்டிடங்கள், 27,041 மின்கம்பங்கள், 506 கி.மீ. மின் கம்பிகள், 7,300 டிரான்ஸ்பார்மர்கள், 1,526 துணை மின் நிலையங்கள், 1,110 மீனவர்களின் படகுகள் மற்றும் 1,902 இடங்களில் ஏரிகள், நீர் தேக்க கால்வாய்கள் சேதமடைந்துள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x