Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி தேசிய ஒற்றுமை மாரத்தான் ஓட்டத்தை குஜராத் மாநிலம் வதோதராவில் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பின்னர் மோடி பேசியதாவது: “மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்தியர்களின் கனவையும், ஆசைகளையும் நிறைவேற்றும் முயற்சியாகவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.
நாட்டின் ஒற்றுமைக்காக படேல் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சாமானியர்களை ஒன்றுபடுத்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். காலனியாதிக்கத்தின் கீழ் அடிமையாக இருந்த மக்களின் மனோபாவத்தை மாற்றினார்.
மகாத்மா காந்தியை நினைக்கும்போது உண்மை, அகிம்சை, தியாகம், எளிமை, சத்தியாகிரகம் ஆகியவை நினைவுக்கு வருகின்றன. சர்தார் படேலை நினைத்தாலே ஒற்றுமை, நல்லாட்சி, விவசாயிகளின் நலன் நினைவுக்கு வருகிறது” என்றார்.
அகமதாபாதில் நடைபெற்ற ஒற்றுமை ஓட்டத்தைத் தொடங்கிவைத்து பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பேசியதாவது: “சர்தார் வல்லபாய் படேலின் 63-வது நினைவு தினத்தையொட்டி நடத்தப்படும் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி, அவருக்கு செய்யப்படும் மிகச் சிறந்த அஞ்சலியாகும். இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொள்ள வந்திருக்கும் மக்களை மனமாரப் பாராட்டுகிறேன்” என்றார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கலந்து கொண்டனர். கட்சி தலைமையகத்திலிருந்து 2 முதல் 5 கி.மீ. வரை ஓட்டம் நடைபெற்றது.
ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி.யும், தொலைக்காட்சி நடிகையுமான ஸ்மிருதி இரானியும் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் 565 இடங்களில் நடைபெற்ற ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சர்தார் படேல் உருவப் படம் அச்சடிக்கப்பட்ட டி சர்ட்களை அணிந்து கலந்து கொண்டனர். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி ஆகியவற்றை மையப்படுத்தி இந்த ஓட்டம் நடைபெற்றது.
இந்தியா சுதந்திரமடைந்தபோது, பிரிந்து கிடந்த 565 சமஸ்தானங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இந்தியாவை பலப்படுத்தியவர் சர்தார் வல்லபாய் படேல். அதை நினைவுபடுத்தும் விதமாக 565 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒற்றுமையின் சிலை என்ற பெயரில் சர்தார் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கும் முயற்சியில் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார். இரும்பு மனிதர் என அழைக்கப்படும் படேலுக்கு, இரும்பினாலேயே இந்த சிலை அமைக்கப்படுகிறது. அதற்காக நாடு முழுவதும் இரும்புத் துண்டுகளை சேகரிக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் தாக்கு
மோடியின் இந்த ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவாத அமைப்பு என்று சர்தார் வல்லபாய் படேல் கூறினார். அவரின் பெயரில் பாஜக ஒற்றுமை ஓட்டத்தை நடத்துவது முரண்பாடாக உள்ளது.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட காரணமாக இருந்தவர்கள், பாபர் மசூதியை இடிக்க ஏற்பாடு செய்தவர்கள், கோத்ரா கலவரத்தின்போது அப்பாவிகள் கொல்லப்பட்டபோது அதை தடுக்காதவர்கள், முஸாபர் நகர் கலவரத்துக்கு காரணமானவர்களை கௌரவப்படுத்தியவர்கள், இப்போது ஒற்றுமை ஓட்டத்தை நடத்துகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT