Published : 06 Nov 2013 07:22 PM
Last Updated : 06 Nov 2013 07:22 PM

2ஜி மீதான ஜே.பி.சி. அறிக்கை அரைவேக்காடனது: ஆ.ராசா

2ஜி அலைக்கற்றை புகார் மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி.) அறிக்கை அரைவேக்காடானது என்று மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் முதன்மையானவரான அவர், மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு அனுப்பிய கடிதத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக் குழு தலைவர் பி.சி.சாக்கோவிடமே திருப்பி அனுப்பும்படி, மக்களவைத் தலைவருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொள்கை முடிவுகளில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கு தொடர்பான விவகாரத்தில், சாக்கோர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதாக ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். ஜே.பி.சி. அறிக்கையானது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்கும் நோக்கத்தோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு சாட்சியம் அளிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அனுப்பிய அறிக்கையும், ஜே.பி.சி. அறிக்கையுடன் இணைக்காதது அதிர்ச்சியைத் தருகிறது. எனவே, எனது அறிக்கையை இணைக்க உத்தரவிட்டு, தற்போதைய ஜே.பி.சி. அறிக்கையைத் திருப்பி அனுப்ப வேண்டும்' என்று மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் ராசா வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, 2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரை விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கை, மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் அக்டோபர் 29-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

2ஜி அலைக்கற்றை முறை கேட்டுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, பிரதமரைத் தவறாக வழிநடத்திவிட்டார் என்றும், இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராகக் குற்றம்சாட்டுவதற்கு முகாந்திரம் ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது, ஜே.பி.சி. குழு முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரப்பட்டிருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஜே.பி.சி.யிடம் விளக்கம் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், அவரை அழைக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது.

ஜே.பி.சி. அறிக்கை தயாரிக்கப்பட்ட பின், அதை ஏற்பது தொடர்பான வாக்கெடுப்பில் பாஜகவின் 5 உறுப்பினர்கள், பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் தலா ஓர் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். பாஜகவைச் சேர்ந்த கோபிநாத் முண்டேவும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x